News Just In

7/26/2024 02:07:00 PM

அபிவிருத்தியில் அம்பாறை மாவட்டம் பின்னடைவதற்கான காரணம் நீண்ட கால அரசியல்வாதிகள் இங்கே குடிகொண்டு தூங்கிக் கொண்டிருப்பதாகும்!

  பொறியியலாளர் யு.கே.நாபீர்.


(முஹம்மட் கான்)

அபிவிருத்தியில் அம்பாறை மாவட்டம் பின்னடைவதற்கான காரணம் நீண்ட கால அரசியல்வாதிகள் இங்கே குடிகொண்டு தூங்கிக் கொண்டிருப்பதாகும்.
இவ்வாறு நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகர், சமூக சேவகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

தற்போது நிதிகளை கொட்டி அடிக்கற்கள் நடப்படுகின்றமை தொடர்பாக வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது,
அம்பாறை மாவட்டம் மாத்திரமல்ல இலங்கை பூராகவும் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை பல்வேறு நிதி ஒதுக்கீட்டின் மூலம் செய்வதற்கு எத்தனித்து அடிக்கற்கள் நடப்பட்டு வருகின்றது. அது அம்பாறை மாவட்டத்தையும் குடி கொண்டிருகின்றது. ஆனால் கடந்த சுமார் 20 வருட காலமாக நடப்பட்ட அடிக்கற்கள் புழுதி தோய்ந்த நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.அதற்கு மேலால் மீண்டும் அடிக்கல் நாட்டப்படுகின்றதே தவிர, மக்களின் தேவை அறிந்து சேவை செய்கின்ற அரசியல்வாதிகள் இங்கே இல்லை என்பதே உண்மையாகும்.

கடந்த காலங்களில் வாக்களித்த மக்கள் தற்பொழுது இவர்களை துரத்தி அடிக்கின்ற எண்ணத்தில் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். அந்த அடிப்படையிலே ஏமாற்று அரசியலை செய்கின்ற கட்சிகளும்; அரசியல்வாதிகளும் வருகின்ற பொதுத் தேர்தலுடன் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதை களநிலவரம் எடுத்துக்கூறுகின்றது.

நாம் நாபீர் பெளண்டேசன் ஊடாக எவ்வித அதிகாரமும் இல்லாத போதும், கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக, எமது சொந்த பணத்தின் ஊடாக கிழக்கு மாகாணம் பூராக மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றோம்.

இப்பொழுது மக்களிடம் நாம் செல்கின்ற இடமெல்லாம் அரசியல் வாதிகளில் அதிருப்தி அடைந்த நிலையில், நாபிர் பெளண்டேஷனோடு கைகோர்த்த வண்ணம் இருக்கின்றனர். எங்களை நேரடியாக அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். இவர்களை அரவணைத்து அவர்களுடைய தேவைகளை இனம் கண்டு அவர்களுக்கு மேலும் உதவி செய்வதற்காக நாம் அரசியலில் குதிக்கின்றோம். வேறு எந்த தனிப்பட்ட அஜந்தாக்களும் எங்களிடம் இல்லை. மக்கள் நலன் சார்ந்த அரசியலையே நாம் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம்.

எனவேதான், எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் அதிகாரத்துடன் நாம் முன்னோக்கி செல்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

No comments: