News Just In

6/21/2024 06:35:00 PM

நான்கு வயது மகனை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தை!



ஊவா- பரணகம காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது நான்கு  வயது மகனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் தனது 4 வயது மகனை கொடூரமாகத் தாக்கியதை காணொளியாகப் பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கம்பஹா தோட்டம், மேல் பிரிவு – உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.

மனைவி தனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் மகனை தாக்கும் காட்சியை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தக் காணொளியை சந்தேக நபரின் மனைவி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும், அதன்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்கப்பட்டதாக கூறப்படும் 4 வயது சிறுவன் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (21) முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: