காஸா விவகாரத்தில் எகிப்தினை விமர்சித்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கைக்கான பலஸ்தீன தூதரகம் தனது அதிருப்தி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில், பலஸ்தீனத்திற்கு எகிப்து உதவுவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸினால் முன்வைக்கப்பட்ட கருத்தினை அடுத்து எமது தூதுவராலயம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பலஸ் தீன விடயத்தில் எகிப்து சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் தேவையான எல்லா வழிகளிலும் பல உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.
பலஸ்தீனின் எல்லைகளை லெபனான், சிரியா, ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நான்கு அரபு நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. இவற்றில் ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகியன பலஸ்தீனுக்கான நேரடி நுழைவாயிலைக் கொண்டுள்ளன.
இதன் காரணமாக காஸா மக்களை தமது நாடுகளுக்குள் அனுமதிக்குமாறு இஸ்ரேல் இவ்விரு நாடுகளுக்கும் கடுமையான அழுத்தங்களை வழங்கி வருகிறது. தாக்குதல்கள் மூலமாக காஸா மக்களை இவ்விரு நாடுகளுக்கும் அனுப்பி விட்டு காஸாவை முழுமையாக கைப்பற்றுவதே இஸ்ரேலின் திட்டமாகும்.
எனினும் இதற்கு எகிப்தும் ஜோர்தானும் ஒத்துழைக்கவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாபிரிக்க கொண்டு வந்த பிரேரணைக்கு எகிப்து ஆதரவளித்தது. இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த இந்த தீர்மானத்தில் எகிப்து பாரிய அழுத்தங்களைச் சந்தித்தது.
அது மாத்திரமன்றி பலஸ்தீன அதிகார சபை மற்றும் ஹமாஸ் போன்ற இயக்கங்களும் பலஸ்தீனுக்கு எகிப்து வழங்கி வரும் ஆதரவுக்கு எப்போதும் தமது நன்றியை வெளிப்படுத்தி வருகின்றன. இவ்வாறான விடயங்களை அறியாமல் உயர் சபையான பாராளுமன்றத்தில் உரையாற்றுவதன் மூலம் எகிப்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம்.
இவ்வாறான உரைகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காஸா விடயத்தில் சர்வதேசத்தை பிழையாக வழிநடத்தலாம். இதனால்ரூபவ் தங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரது உரை தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறும் இதன் மூலம் பலஸ்தீனுடனான எகிப்தின் உறவில் பாதிப்புகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துகிறோம் என்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தனது பாராளுமன்ற உரையின்போதுரூபவ் “இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவையும் அந்நாட்டின் கொடுங்கோல் இராணுவத்தினையும் கட்டுப்படுத்த முடியாமல் பக்கத்தில் இருக்கின்ற எகிப்து ஜனாதிபதி சிசி நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்.
பலஸ்தீன மக்களை பலி கொடுப்பதற்காக ரபா எல்லைப் பிரதேசம் இஸ்ரேலிய இராணுவத்திற்காக திறந்துவிடப்பட்டிருக்கின்றது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதோடு அக்கடிதத்தின் பிரதி ஹரீஸ் எம்.பிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: