News Just In

5/16/2024 11:24:00 AM

ரஷ்ய போரில் காயமடைந்த இராணுவவீரர் நாடு திரும்பினார் : பொலிஸார் தீவிர விசாரணை!




புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்கான பணத்தை திரட்டும் நோக்கில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

குருநாகல், கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த எரந்த சிந்தக்க தென்னக்கோன் என்பவரே இவ்வாறு கடந்த 9 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

வேறு தொழிலுக்காக ரஷ்யா சென்ற தான், பின்னர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டதாக கூறியுள்ளார்.

தனது மனைவிக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கிலேயே தான் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளதாக எரந்த சிந்தக்க தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்ட தன்னை, முன்வரிசையில் யுத்தத்திற்கு அந்த நாட்டு இராணுவ அதிகாரிகள் அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே தான் யுத்தக் களத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, காயமடைந்ததாகவும் ஆனால், காயமடைந்த தன்னை வைத்தியசாலையில் அனுமதிக்கக்கூட அந்த நாட்டு அதிகாரிகள் முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்யா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தான், நண்பர்களின் உதவியுடன் கடந்த 9 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாக கூறியுள்ளார்.

தனது மனைவி, குழந்தைகளை ரஷ்யாவிற்கு அழைத்து தேவையான சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதியளித்த போதிலும், தனக்கு இறுதி வரை சம்பளம் கூட வழங்கவில்லை எனவும் எரந்த சிந்தக்க தென்னக்கோன் கூறியுள்ளார்.

தனது மனைவியை குணப்படுத்துவதற்காக யுத்த களத்திற்கு சென்று காயமடைந்து பல்வேறு துன்பங்களை தான் அனுபவித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவி கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தன்னை போன்ற பலரை போலி உறுதி மொழிகளை வழங்கி இராணுவத்தில் ரஷ்யா இணைத்து வருவதாகவும், ஆனால் போலி உறுதி மொழிகளை நம்ப வேண்டாம் என ரஷ்ய இராணுவத்தில் இணைந்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாடு திரும்பியுள்ள எரந்த சிந்தக்க தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்

No comments: