News Just In

5/21/2024 01:46:00 PM

ஈரான் ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சருக்கு நடந்தது என்ன?




 ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, கலாநிதி இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் நாளை(21) அடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்றிரவு(19) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் ஜனாதிபதி இப்ரஹpம் ரைசி, வௌிவிவகார அமைச்சர் ஹொசேன் அலி அப்துல்ஹானியான் உள்ளிட்ட தூதுக் குழுவினர் அஜர்பைஜானுக்கு நேற்று சென்றனர்.

ஈரான் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட கிஸ் கலாசி மற்றும் கொடாஃபரீன் நீர்ப்பாசனத் திட்டங்களை திறந்துவைப்பதற்காகவே அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி, வௌிவிவகார அமைச்சரின் மறைவு தொடர்பாக கவலை வௌியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேனி, 5 நாட்களை துக்ககாலமாக பிரகடனம் செய்துள்ளார்.

அன்புள்ள ஈரான் மக்களுக்கு தமது கவலையை தெரிவிப்பதாக ஈரான் ஆன்மீகத் தலைவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் உயிரிழப்பு தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து இலங்கையர்களின் சார்பாகவும் ஈரான் மக்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கைக்கான ஈரான் தூதுவரை இன்று சந்தித்து அனுதாபங்களை தெரிவித்தார்.

ஈரானின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஜனாதிபதி இப்ரஹிம் ரைசி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி சீ ஜின் பிங், கலாநிதி இப்ரஹிம் ரைசி சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கலாநிதி இப்ரஹிம் ரைசியின் உயிரிழப்பு ஈரான் மக்களுக்கு பேரிழப்பு என சுட்டிக்காட்டியுள்ள சீன ஜனாதிபதி, இந்த தருணத்தில் சீனா தனது சிறந்த நண்பனை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரின் உயிரிழப்பு பாரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் தெரிவித்துள்ளார்.

தனது உண்மையான நண்பனை இழந்து விட்டதாக புட்டின் கூறியுள்ளார்.

உயிரிழந்த ஈரான் ஜனாதிபதிபதியை கௌரவிக்கும் ​நோக்குடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் அந்நாட்டில் துக்கதினத்தை அறிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் பாகிஸ்தானின் சிறந்த நண்பர்கள் என பாகிஸ்தான் கூறியுள்ளார்.

இதேவேளை ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரின் உயிரிழப்பு தொடர்பில் ஈரான் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியையும் வேதனையும் பகிர்ந்துகொள்வதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளனர்.

காஸா பிராந்தியத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பில் உயிரிழந்த ஈரானிய அதிகாரிகளுக்கு கெளரவமான வரலாறு கிடைக்க வேண்டும் என ஹமாஸ் இயக்கத்தினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லெபனானின் தற்காலிக பிரதமர் நஜிப் மஹதி ஈரான் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் 3 நாட்கள் துக்கதினத்தை பிரகடனப்படுத்தியுள்ளர்.

ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பு தொடர்பில் மிகுந்த மனவருத்தம் அடைவதாகவும் இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவர் பெரும் பங்களிப்பை நல்கியதாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

No comments: