(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்த வயோதிபரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வாழைச்சேனைப் பொலிஸார் பொதுமக்களிடம்; வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில் பெயர், ஊர், வயது உள்ளிட்ட எந்த விவரங்களும் அறியப்படாத வகையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் ஒருவர் மரணித்து விட்டதாகவும் அவரை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடிப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்;கு முன்னர் அநாமதேயமாக மோட்டார் சைக்கிள் ஒன்றினால் மோதப்பட்டு காயமைடைந்த இந்த வயோதிபர் சுய நினைவிழந்து வீதியருகே விழுந்து கிடந்துள்ளார்.
இதனை அவதானித்த உதவும் உள்ளங்கள் அவரை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சேர்ப்பித்துள்ளனர். அதன் பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலதிக சிகிச்சை முடிந்த பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மரணித்துள்ளார்.
மரணித்த இந்த வயோதிபர் இன்னாரெனத் தெரியாத காரணத்தினால் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதில் பொலிஸார் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதனால் சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.ரமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.
No comments: