நூருல் ஹுதா உமர்
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்செய்கை அழிந்தது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வை சந்தித்து உடனடியாக நஷ்டஈட்டை வழங்குமாறு கோரியிருந்தேன். அதற்கான படிவத்தை பெற்று இப்போது விவசாயிகள் மும்முரமாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் வழங்க தயாராக உள்ள நஷ்டஈடு அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அவர்கள் முதலீடு செய்த தொகைக்கு ஓரளவு ஈடுகொடுக்க கூடிய அளவுக்காவது அவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரை நிகழ்த்திய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல்லாயிரம் ஏக்கர் காணியில் செய்கை செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்செய்கை பாதிக்கப்பட்ட விடயத்தை இந்த சபைக்கு கொண்டு வர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நஷ்டஈட்டை கோருகிறேன்.
அதேபோன்று இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக நீர்ப்பாசன திணைக்கள குளக்கட்டுக்கள், வண்டுகள், மதகுகள், அடங்களாக பல கட்டுமானங்கள் அம்பாறையில் சேதமடைந்துள்ளன. இதனால் அடுத்த போகத்திற்கான விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் விவசாயிகள் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை மீள புனரமைக்க 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நானும் உட்பட இசாக் ரஹ்மான், பைசால் காசிம் போன்ற எம்.பி க்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்து இது சம்பந்தமாக பேசியிருந்தோம். அந்த நிதியை நீர்ப்பாசன அமைச்சர் உடனடியாக ஒதுக்கீடு செய்து புனரமைப்பு வேலைகளை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.- என்றார்.
No comments: