News Just In

1/31/2024 02:18:00 PM

அம்பலமாகிய காணி சுவீகரிப்பு முயற்சிகள்!



யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத் தற்போது படையினரிடம் உள்ள நிலங்களுடன் 500 ஏக்கரைச் சுவீகரித்துத் தருமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை விடுத்த கோரிக்கைக்கமைய நேற்று (30) நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்கு வருகை தந்து பார்வையிட்டுச் சென்றனர்.

இதற்கமைய ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த 500 ஏக்கரை சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுகின்றது.

விமானப் போக்குவரத்து அதிகார சபை ஊடாக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த வரைபடம் சகிதம் சுவீகரிக்க முயற்சிக்கும் பகுதிகளின் கிராமசேவகர்களும் இதன்போது அப்பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றதனால் அப்பகுதி மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

வலி. வடக்கில் ஏற்கனவே படையினரிடம் மூவாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனை விடுவிக்குமாறு பலகோரிக்கைகள் முன்வைத்தபோதும் மௌனம் காக்கும் அரசு தற்போது இந்த இரகசிய முயற்சியில் ஈடுபடுகின்றமை அம்பலமாகியுள்ளது.

வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது காணி விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை விடுவிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்த வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், அல்லாவிடின் அதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலில் இவ்வாறு மீளவும் காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதை ஏற்கமுடியாது என தெரிவித்தார்

No comments: