
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சுனாமி கடற்பேரலைத் தாக்கத்தினால் கடந்த 2004.12.26 அன்று காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை தற்போது 19 வயதாகியுள்ள நிலையில் சுனாமியால் உயிரிழந்த ஏனையவர்களுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுனாமியால் தவறவிடப்பட்ட அபிலாஷ் வைத்தியசாலையொன்றில் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் அவரை 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.
அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அவர் அழைக்கப்பட்டு வந்தார். பின்னர் மரபணுப் பரிசோதனை மூலம் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது மகன்தான் அபிலாஷ் என உறுதிப்படுத்தப்பட்டு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அபிலாஷிற்கு 19 வயதாகும் நிலையில் சுனாமியின் 19 வருட நிகழ்வில் அவர் தனது வீட்டில் நிறுவப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் தனது பெற்றோருடன் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சுனாமி கடற்பேரலையினால் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் தாம் இந்த 19 வருட நினைவு வேளையில் அஞ்சலி செலுத்துவதாகவும், இம்முறை கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையை எழுத்தவுள்ளதாகவும், பின்னர் தனது உயர் கல்வியை வெளிநாட்டில் தொடர்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அபிலாஷ் தெரிவித்தார்.
No comments: