
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் நம்பகத்தன்மை சீர்குலைவதற்கு இடமளிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எழுத்துமூலமான கோரிக்கையை மீண்டும் விடுத்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண வீரகேசரியிடம் தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தின் கடந்த வார அமர்வின் போது, நாட்டின் அமைச்சரவை அமைச்சுப்பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் மேல்நீதிமன்ற நீதிபதி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை சபையில் தெரிவித்திருந்தார். அந்த விடயங்கள் உண்மையா இல்லையா என்பது சம்பந்தமாக முழுமையாக ஆராயப்பட வேண்டும்.
ஏனென்றால், நீதிபதிகள் மீதும் சட்டத்தரணிகள் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் அவை பாரதூரமானதாகும். அதேபோன்று அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவையாக இருந்தால் குற்றச்சாட்டு சுமத்தும் நபரின் பொறுப்புக்கூறல் முக்கியமாகின்றது என்பதோடு, நாட்டின் நீதித்துறைக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவும், தனிநபரின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.
ஆகவே, தான் நாம், இவ்விதமான நிலைமைகளை ஆராய்வதற்காக சுயாதீன அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்றை ஸ்தாபித்து உண்மைகளை வெளிப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், நாம், கடந்தகாலத்தில் நீதித்துறையின் சுயாதீனத்துக்கும், நம்பகத்தன்மைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்கள் தமக்கு காணப்படுகின்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி ஏற்படுத்துகின்ற சேதப்படுத்தல்கள் சம்பந்தமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை நேரில் சந்தித்து எடுத்துரைத்திருந்தோம்.
அதன்போது, குறித்த விடயம் சம்பந்தமாக அவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்த நிலைமை தற்போதும் நீண்டு கொண்டுள்ளது. ஆகவே நாம் மீண்டும், குறித்த விடயத்தினை எழுத்து மூலமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவருடைய பதிலுக்காக காத்திருகின்றோம் என்றார்.
No comments: