
கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அது சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுமையான பங்களிப்புடனும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க அரசாங்கம் விசாரணைகள் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைத் தேடுவது மட்டும் போதாது என்றும் பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்துள்ளார்
No comments: