தினசரி 10 லட்சம் மலர்கள் அனுப்பிவைப்பு

ஓசூர் அருகேயுள்ள பாகலூரில் இருந்து வெளிமாநிலத்துக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள ரோஜாக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் மண் வளம் காரணமாக இப்பகுதிகளில் ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஓசூர் பகுதியில் 4,000 ஏக்கரில்பசுமைக் குடில்களில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தாஜ்மகால் (அடர் சிவப்பு) நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட22 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினத்துக்காக, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ரோஜா ஏற்றுமதிசெய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவிலான போட்டி காரணமாக ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. மேலும், விமானக் கட்டணம் உயர்வால் விவசாயிகள் ஏற்றுமதியைத்தவிர்த்து, உள்நாட்டு வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
வரும் 14-ம் தேதி காதலர் தினக்கொண்டாட்டத்துக்காக ஓசூர் பகுதி ரோஜாவுக்கான உள்நாட்டுவர்த்தகம் களைகட்டியுள்ளது. குறிப்பாக, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல நகரங்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆர்டர் அதிகரித்துள்ளதால், ஓசூர்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினசரி 10 லட்சம் மலர்களை அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ரோஜா உற்பத்தியாளர் சதீஷ் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்கள் ரோஜாப் பூக்களை கொள்முதல் செய்கின்றனர். தேவை அதிகரித்துள்ளநிலையில், சாகுபடி பரப்பு குறைந்ததால் உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமான நாட்களில் 20 பூக்கள் கொண்ட கட்டு ரூ.150-க்கு விற்பனையாகும்.
ஆனால், தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும். உள்நாட்டு வர்த்தகத்துக்கு தினசரி 2 லட்சம் ரோஜா மலர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது தினமும் 10 லட்சம் மலர்கள் அனுப்பி வருகிறோம். குறிப்பாக, தாஜ்மகால் ரோஜாவுக்கு 80 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டில் வரவேற்பும், விலையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments: