News Just In

7/11/2023 04:06:00 PM

சரத் வீரசேகரவின் கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை!

சரத் வீரசேகரவின் கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை! சுமந்திரன் எம்.பி. தகவல்



முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "நீதிபதி தொடர்பில் தனிப்பட்ட விமர்சனம் முன்வைக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளைக்கு அமைவாக அடுத்த அமர்வில் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்."என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் நீதிபதியொருவரின் தலையீட்டை வாய்ப்பாக பயன்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை தூண்டிவிடுவதற்கே சரத் வீரசேகர முயற்சிக்கின்றார் எனவும் கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (07.07.2023) நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆற்றிய உரையில், குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகின்றார்கள். ஆகவே, பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

No comments: