
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண செயற்பாடுகளுக்கு கனடா பங்களித்துள்ளதுடன், பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் தொடர்ந்தும் இலங்கையுடன் இருப்போம்” என இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானீகர் எரிக் வொல்ஷ் தெரிவித்துள்ளார்.
ஜுலை முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் கனடா தினச் செய்தியில் அவர் இருதரப்பு உறவுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையர்கள் வெளிவந்து, உள்ளடக்கமான, செழுமையான சமூகத்தில், எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கும், தமது உண்மையான ஆற்றலை அடைவதற்கும் தயாராகும் உண்மையான சந்தர்ப்பமாக இந்தக் கணத்தை நாம் பார்க்கின்றோம்.
கடந்த காலத்தின் கசப்பான உண்மைகளை எதிர்கொள்வதற்கும், நீண்ட கால அநீதிகளை அடையாளப்படுத்துவதற்கும் கனடா பணியைத் தொடர்கின்ற நிலையில், அர்த்தப்பூர்வமானதும், நீடிக்கும் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு எமது சொந்த அனுபவங்களில் இருந்து ஆதரவளிப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். முன்னோக்கிப் பார்க்கும்போது, நாம் கவனஞ் செலுத்த வேண்டிய புதிய மற்றும் நீண்ட கால முன்னுரிமைகள் எம்மிடம் உள்ளன.
கனேடியக் கூட்டமைப்பின் 156ஆவது ஆண்டாகிய இந்த விசேட தினத்தில் உலகம் முழுவதிலுமுள்ள கனேடிய மக்களின் சிந்தனைகள், பிரம்மிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளையும், பல கலாசார வாதத்தையும், வேற்றுமையில் ஒற்றுமையினையும், அனைவரையும் உள்ளடக்குதல், முன்னேற்றம் என்பவற்றின் கலங்கரை விளக்கமாக நிற்பதுமாகிய ஒரு துடிப்பான சமூகம் என நன்கறியப்பட்ட சொந்த நாட்டை நோக்கிச் செல்கிறது.
கனேடிய மக்களின் பெரும் சாதனைகளையும், பங்களிப்புக்களையும் இன்று நாம் கொண்டாடுவதுடன், உலகில் வாழும் பலரின் ஒரு விருப்பத்தெரிவாக கனடாவை மாற்றிய விழுமியங்கள் குறித்தும் சிந்திக்கிறோம்.
எம் மக்களுக்கிடையிலான பிணைப்புகள் மிகவும் ஆழமாக இருப்பதுடன், என் தாயகத்துடன் உறுதியான பிணைப்புக்களைக் கொண்டுள்ள பலரின் மத்தியில் எமது தேசிய தினத்தை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
இலங்கையின் உறுதியான பங்காளராக பல தசாப்தங்களாக கனடா இருந்துள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: