News Just In

7/01/2023 09:17:00 AM

பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் 25 பேர் உயிரிழப்பு ; இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பவம்!

இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துயரச் சம்பவம் இன்றைய தினம் (01.07.2023) அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

குறித்த பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் திடீரென தீப்பிடித்தது.

பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 7 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மகாராஷ்டிரா மாநில பொலிஸார், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments: