News Just In

3/15/2023 10:50:00 AM

சிறுவர் பெண்கள் பாதுகாப்பும் உரிமைகளும் முதலில் ஆரம்பித்தது இஸ்லாத்திலேதான் அதனை நபிகள் நாயகமே நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். இணைப்பாளர் ஐஸ்வர்யா தேவி





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சிறுவர் பெண்கள் பாதுகாப்பும் உரிமைகளும் முதலில் ஆரம்பித்தது இஸ்லாத்திலேதான் அதனை நபிகள் நாயகமே நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் என சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் பாதுகாப்புக்கும் உள்வாங்குதலுக்குமான இணைப்பாளர் ஐஸ்வர்யா தேவி குகதாசன் தெரிவித்தார்.

அனைத்துலக பெண்கள் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை 14.03.2023 இடம்பெற்ற நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இஸ்லாமிக் றிலீப் (Islamic Relief) அமைப்பின் அனுசரணையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத், உதவிச் செயலாளர் ஏ.சி.ஏ. அப்கர், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.எச். சிஹானா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எச்.எம். ஜலீலா முஸம்மில், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அப்துல் மஜீத் ஷாபிறா வஸீம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இணைப்பாளர் ஐஸ்வர்யா தேவி,

சிறுவர் பாதுகாப்பு அல்லது பெண்கள் பாதுகாப்பு பெண்ணுரிமைகள் எல்லாவற்றையும் முஹம்மது நபியவர்கள் இஸ்லாத்தின் போதனைப்படி வாழ்ந்து காட்டிய பின்னரே சிறுவர் உரிமை பெண்ணுரிமை ஆர்வலர்கள் அதனை எடுத்துக் கையாண்டார்கள்.

ஆனால் அதனை இப்பொழுது வேறு யாரோ தாங்களேதான் சிறுவர் உரிமைகளையும் பெண்ணுரிமைகளையும் நடைமுறைப்படுத்திக் காட்டி சாதித்து போலவும் இஸ்லாம் பின்னுக்கு நிற்பது போலவும் ஒரு தோற்றப்பாட்டைக் காட்டிக் கொள்கின்றார்கள்.

பெண்கள் என்று வரும்பொழுது குடும்பத் திட்டமிடல் என்பது மிக முக்கியமானது. அதிலே பெண் என்பவள் ஒரு ஜனாதிபதி, தலைமை அதிகாரி, நிர்வாகி, நிதி முகாமைத்துவ அலுவலர் என்று இப்படிப் பலதரப்பட்ட பாத்திரங்களைச் சுமக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட பாத்திரப்பங்குகளை வகித்து சிறந்த முறையில் குடும்ப நிருவாகத்தையும் தற்போதைய நிலையில் பொது நிருவாகத்தையும் கொண்டு செல்வதற்கு பெண்கள் தயாராக உள்ளார்கள் என்பதையே சமகாலத்தில் பெண்களின் முன்னேற்றங்கள் மெய்ப்பிக்கின்றன” என்றார்.

இந்நிகழ்வில் நெருக்கடியான கால கட்டத்தில் பிரதேச மக்களுக்குச் சிறந்த வைத்தியச் சேவைகளையாற்றியமைக்காக சிறந்த பெண் ஆளுமை என்ற தெரிவில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் பெண்களின் வாழ்வியல் நிகழ்வுகளைத் தாங்கிய "நிஸா" எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


No comments: