News Just In

12/14/2022 01:52:00 PM

தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே உறவை மீள் நிர்மாணிப்பதற்கான ஆவணமாக ஆதாரம் நூலும் குறுந்திரைப்படமும் வெளியீடு





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஒன்றாக ஆவணப்படுத்தும் 'ஆதாரம்' நூலின் வெளியீட்டு நிகழ்வும் இரு சமூக சகவாழ்வை முன்னிறுத்தும் 'நொச்சிமுனை தர்ஹா' ஆவணப்படம் திரையிடலும் மட்டக்களப்பு சாந்தி திரையரங்க கலைக் காட்சிக் கூடத்தில் சனிக்கிழமை 10.12.2022 இடம்பெற்றது..

இலங்கையின் கிழக்கில் நிகழ்ந்த ஐந்து துன்பியல் சம்பவங்களின் மாற்று ஆவணமான இவற்றை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஐ. எம். ஜாபிர் (என் ஆத்மா) தயாரித்து வழங்கியிருந்தார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையின் அடிப்படையில் அவர் எழுதி இயக்கிய 'நொச்சிமுனை தர்ஹா - சகவாழ்வின் கடைசிக் கோட்டை' ஆவணத் திரைப்படமும் நிகழ்வில் திரையிடப்பட்டது.

7வது யாழ். சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவான இவ் ஆவணப்படம் 11வது யுபுநுNனுயு 14 குறுந் திரைப்பட விழாவில் 'சிறந்த ஆவணப்பட விருது' பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஆதாரம் நூலில் வீரமுனை அகதி முகாமில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றி முன்னாள் கிராம அலுவலர் கே. பொன்னம்பலம், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை பற்றி எம்.எச்.எம். பதியுஸ்ஸமான், ஏறாவூர் பொதுமக்கள் படுகொலை பற்றி சமூக ஆய்வு ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஆகியோர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் மேலும் புதுக்குடியிருப்பு பொதுமக்கள் படுகொலை, நொச்சிமுனை தர்ஹா கந்தூரி ஆகிய தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகளும் இந்த ஆதாரம் என்ற ஆவண நூலில் பிரசுரமாகியுள்ளன.

இந்நிகழ்வுகள் சராசரி ஒரு நூல் வெளியீடு மற்றும் திரைப்பட நிகழ்வாகவன்றி தமிழ், முஸ்லிம் சமூகங்களின் சகவாழ்வுக்கான போராட்டத்தின் சிறு முன்னெடுப்பெனக் கருத முடியும் எனவும் கிழக்கு, வடக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே உறவை மீள் நிர்மாணிப்பதற்கான ஆவணமாகக் கொள்ள முடியும் எனவும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சமூக நல்லுறவின் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சிறகு நுனி கலை ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக நல்லுறவின் செயற்பாட்டாளர்களான பேராசிரியர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் பலர் கலந்து கொண்டனர். 

-

No comments: