News Just In

11/21/2022 06:52:00 PM

நாடாளுமன்றத்தில் பிள்ளையான் - சாணக்கியன் கடும் மோதல்!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தை சூறையாடுவதாகத் தெரிவித்து சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்ததால் இருவருக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று (21) திங்கட்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6 ஆம் நாள் விவாதம் இடம்பெற்றது.

இதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்யும் மோசடியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுங்கள். சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தை சூறையாடுகிறார் என கூறினார்.

இதன்போது பொங்கியெழுந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்; சாணக்கியன் தொடர்ந்து எனது பெயரை பயன்படுத்துகிறார், பொய்க்குற்றச்ச்சாட்டுக்களை முன்வைக்கின்றார், முறையற்ற வகையில் தாழ்த்தி பேச வேண்டாம் என்றார்.

இந்நிலையில் எம்.பி.க்களுக்கு பேச்சுரிமை உள்ளது. இவரது 20 மோசடிகள் தொடர்பான விபரங்கள் என்னிடத்தில் உள்ளன. கனிஷ்கா என்ற இவருக்கு ஆதரவான நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துறை அழிக்கப்படுகிறது.

வட்டவான் பிரதேசத்தில் இவரது ஆதரவாளர்களுக்கு காணி வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு இவர் பெரும் தடையாக உள்ளார். மறுபுறம் வீதி அபிவிருத்தியிலும் மோசடி இடம்பெறுகிறது.

அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளிலும் அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் இவற்றை அவர் பொய் என்று சபையில் நிரூபித்து காட்டட்டும் என சாணக்கியன் அடுக்கடுக்காக பிள்ளையான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்ட பிள்ளையான், ''சாணக்கியன் தொடர்ந்து எனது பெயரை குறிப்பிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். முறைகேடான வகையில் பேசுகிறார்' என்றார்.

அவரது குறுக்கிடலை செவிமடுக்காத சாணக்கியன் எம்.பி. , மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான காணியை இவரது மைத்துனர் முறைகேடு செய்துள்ளார். நான் பொய் உரைக்கவில்லை ஆதாரம் உள்ளது.

அண்மையில் இரண்டாம் எலிசபெத் மகாராணி உயிரிழந்தால் இந்த காணி ஐந்தாம் எலிசபெத் மகாராணி வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

காலநிலை மாற்றத்திற்கான பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்க முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்து இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

ஏனெனில் இவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரமல்லாது முழு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்களை சூறையாடுவதாக சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.




No comments: