News Just In

11/01/2022 11:47:00 AM

கடுமையான எதிர்ப்பை தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் !






கௌரவ பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு -01
ஜனாதிபதி அவர்களே ,

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவன் இலக்கான சம்பவத்துக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் உள்ளடங்கிய விடயங்களாக

மு ச்சக்கர வண்டியொன்றில் பிரதான வீதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பொலீஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் மாத்தறை மகாலிங் வட வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கின்ற ஹரிஸ் ஹஸங்க தேஸான் (15) மாணவனுடைய தலையில் கடுமையான காயம் ஏற்பட்டமை சம்பந்தமாக இலங்கை ஆசிரிய சேவை சங்கமானது அதற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையையும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்.


02)விஷேடமாக இலங்கைப் பொலீஸார் இதுவரையில் மேற்கொண்டுள்ள சூட்டுச் சம்பவங்களினால் ஏராளமான மனித உயிர்கள் பறிக்கப் பட்டுள்ளதோடு அண்மையில் இவ்வாறான சூட்டுச் சம்பவத்தினால் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவரொருவனினதும் உயிர் பறிக்கப் பட்டதனையும் எடுத்துக் காட்ட முடியும்.


03)அவ்வாறே தங்களுடைய உரிமைகளுக்காக போராட்டங்களை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு போராட்டத்துக்கு அநீதியான முறையில் தாக்குதலை மேற்கொண்டு , அவர்களை கைது செய்து ,தடுப்புக் காவலில் வைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்ட இலங்கைப் பொலீஸார் இதுவரையில் நாட்டின் பொது மக்களின் பாதுகாப்புக்கான சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்து தங்களுடைய பிரதான பொறுப்பில் இருந்து விலகி நிற்கின்றனர்.


04)கடந்த நாட்களில் தலைமைப் பொலிஸ் அதிபர் ஒருவர் போதைப் பொருள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அதற்குக் கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப் பட்டுள்ள பின்புலத்தில் சட்டத்தை நடைமுறைப் படுத்தும் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் சிலர் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த நிறுவனங்கள் தங்கள் பொறுப்பற்ற தன்மையால் கடுமையான சீரழிவைச் சந்தித்து வருகின்றன என்பதனை நாங்கள் உறுதியாக வலியுறுத்துகிறோம்.


மேலும் நாட்டின் சட்டம் மற்றும் நிறுவனங்களின் குறுகிய நோக்கங்களுக்கு இடமளிக்காமல் முதலில் இலங்கைப் பொலீஸார் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதனை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எமது சங்கம் பொறுப்புடன் கேட்டுக் கொண்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தின் பிரதியினை பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டார்.

S. Pradeep


No comments: