News Just In

9/01/2022 09:43:00 AM

தனிமையில் வாழும் பெண்ணின் வீட்டை துவம்சம் செய்த காட்டு யானை – ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.



 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தினமும் காட்டு யானைகளின் அச்சத்தின் மத்;திக்கத்தில் வாழ்ந்து வரும் எனது சிறிய வீட்டையும் அண்மையில் காட்டு யானை தாக்கி உடைத்துவிட்டது. தற்போது என்னால் என்ன செய்வது என அறியாது மன விரக்தியின் மத்திக்கத்தில் வாழ்ந்து வருகின்றேன் என தெரிவிக்கிறார் கவிதா.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள திக்கோடை கிராமத்தில் கணவரைப் பிரிந்த நிலையில் தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார் கவிதா எனும் பெண்மணி. தனது குடும்ப வறுமை நிலை காரணமாக தனது பிள்ளையை ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் நிலையம் ஒன்றில் விட்டு கற்பித்து வருகிறார். இந்நிலையில் தான் எதுவித வருமானமும் இன்றி இருக்க முடியாது என சிந்தித்து ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து அதிலிருந்து கிடைத்த வருமானத்தில் சிறிய ரக வீடு ஒன்றைக் அரை குறையாக கட்டியுள்ளதோடு தனது உடல் சுகயீனம் காரணமாக தற்போது அந்த வேலைக்கும் அவர் செல்வதில்லை.

இந்நிலையில் வெளியிடங்களுக்குச் சென்று வீட்டு வேலைகளைச் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வரும் கவிதாவின் வீட்டை அண்மையில் காட்டு யானை தாக்கி துவம்சம் செய்துள்ளது.

எதுவித வேலி பாதுகாப்புக்களோ, மலசலகூட வசதியோ இன்றி வாழ்ந்து வரும் தனக்கு ஒரு மலசல கூடத்தையும், யானையால் தாக்கி அழிக்கப்பட்டுள்ள தனது வீட்டையும் புனரமைத்துத்தர யாராவது முன்வருமாறு கவிதா கண்ணீர் மல்க தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் மிக நீண்டகாலமாவிருந்து காட்டுயானைகள் அட்டகாசங்களும் தாக்குதல்களும், அதிகரித்தவண்ணமுள்ளன. மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும். இதுபற்றி பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அப்பகுதியில் நிலைகொண்டுள்ள காட்டு யானைகளை இன்னும் சரணாலயங்களுக்குக் கொண்டுசேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.



No comments: