News Just In

9/07/2022 01:53:00 PM

பாடசாலைத் தோட்டம் முழுக் கிராமத்திற்குமே முன் மாதிரியாக உணவு உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் விவசாயப் போதனாசிரியை!





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஒரு பாடசாலையில் சிறந்த முறையில் அமைக்கப்பட்டு பராமரித்து பயன் தரும் பயிர்கள் நிறைந்த தோட்டத்தினால் அந்தப் பாடசாலையைச் சுற்றியுள்ள முழுக் கிராமமுமே விவசாய உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் புதனன்று 07.09.2022 இடம்பெற்ற பாடசாலைத் தோட்டம் அமைப்பதற்கான அறிமுக நிகழ்வில் பாடசாலையின் விவசாயப் பிரிவு மாணவர்களிடையே அவர் உரையாற்றினார்.

பாடசாலையின் பிரதி அதிபர் ஏ. அப்துல் நாஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயத்தில் ஆர்வமுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மரக்கறிப் பயிர் விதைகளும் நிலைபேறான விவசாயக் கலாச்சாரத்தில் நஞ்சற்ற விவசாயத்திற்கான ஆலோசனைக் கையேடும் இயற்கைப் பசளைத் தயாரிப்பு செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை முர்ஷிதாஷிரீன்> உணவு உற்பத்தியை மேற்கொள்ள வீட்டுத் தோட்டங்கள்> பாடசாலைத் தோட்டங்கள்> அலுவலகத் தோட்டங்கள் என்று உணவுற்பத்தியைப் பெருக்குவதற்கான சகல வழிகளையும் செயற்படுத்தி விவசாயத் திணைக்களம் முயற்சித்து வருகின்றது.

அந்த வகையில் பாடசாலைத் தோட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. ஏன் என்றால் ஒரு பாடசாலையில் அமைக்கப்படும் தோட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பாடசாலையில் படிக்கின்ற மாணவர்கள் அந்த ஊருக்கே போதுமான அளவில் விவசாயத் தோட்டங்களை தங்களது வீடுகளில் அமைத்துக் கொள்ள முடியும் இதன் மூலம் இரசாயனம் கலக்காத சிறந்த போஷாக்குள்ள மரக்கறிகள்> கிழங்குகள்> இன்ன பிற தானியங்களையும் உற்பத்தி செய்து கொள்ள முடியும்” என்றார்.


No comments: