News Just In

8/26/2022 10:35:00 AM

வடக்கு- கிழக்கு விவகாரம் தொடர்பில் மு.கா தலைவரை விமர்சித்த கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம்.சபீஸ் மீது கல்முனை முதல்வர் றக்கீப் காட்டம்




நூருல் ஹுதா உமர்

முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வகிக்கக்கூடிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதற்கு சபீஸ் போன்ற மாற்றுக் கட்சியினருக்கு எவ்வித அருகதையும் கிடையாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்து கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதல்வர் றகீப் இதனைக் குறிப்பிட்டுள்ளார். என அவரது ஊடகப்பிரிவினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில்;

ரவூப் ஹக்கீம் எனும் ஆளுமை கடந்த 03 தசாப்தங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்திற்கு தலைவராக இருந்து வருகிறார். வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவை சம்மந்தமான தகவல்களையும் புள்ளி விபரங்களையும் தனது விரல் நுனியில் வைத்திருக்கின்ற ஒரு தலைமையென்றால் அது ரவூப் ஹக்கீம் மாத்திரம்தான்.

சமூகம் சார்ந்த விடயங்களாயினும் தேசியப் பிரச்சினைகள் என்றாலும் அனைத்து விடயங்களிலும் அவர் முனைப்போடு செயலாற்றி வருவதை நாட்டின் புத்திஜீவிகளும் சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த உண்மையை அவரது அரசியல் எதிரிகள் கூட மறுப்பதற்கில்லை. இலங்கை அரசியலைப் பொறுத்தவரை ரவூப் ஹக்கீம் அவர்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவும் சக்தியாகவும் திகழ்கிறார் என்பதை எவராலும் மறுத்து விட முடியாது.

சபீஸ் என்பவர் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அரசியலை செய்து வருகின்றவர். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் சம்மந்தமாகவோ அதன் தலைமைத்துவம் பற்றியோ உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறி, நியாயமற்ற முறையில் விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையுமில்லை. தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், அதன் தலைவரான அதாஉல்லா பற்றி பேசிக்கொள்ளட்டும். அவருக்கான அறிவுரைகளை வழங்கட்டும். அதில் குறுக்கிடுவதற்கான எந்த விதமான தேவையும் எமக்கில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு வடக்கு, கிழக்கு சமூகம் தொடர்பில் போதிய அறிவு இல்லையென்று சொல்வதற்கான எந்த உரிமையும் சபீஸ் போன்ற அரசியல் கற்றுக்குட்டிகளுக்கு இல்லை.
வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பான விடயத்தில் தமிழர்களின் நிலைப்பாடு இணைக்கப்பட வேண்டும் என்பதாகும். முஸ்லிம்களின் நிலைப்பாடானது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் பிரிந்திருக்க வேண்டும் என்பதாகும். பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் நிலைப்பாடும் இணையக்கூடாது என்பதுதான். இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது உரிய தருணத்தில் அரசாங்கம்தான் அது பற்றித் தீர்மானிக்கும். இப்போது அது பற்றிப்பேசி இன முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை. இந்த விடயத்தில் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறையையே தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கடைப்பிடித்து வருகிறார்.

இப்போது, பிரிப்பதா இணைப்பதா என்று பேசி இன முரண்பாட்டுச் சூலை உருவாக்குவது ஒரு பொறுப்புவாய்ந்த கட்சித் தலைமைக்கு பொருத்தமானதல்ல, அந்த அடிப்படையில்தான் தமிழ் சமூகத்தினருடன் அவர் இணக்க அரசியலை செய்து வருகின்றார். சிறுபான்மைச் சமூகம் என்பது தமிழர்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாகும். ஒரு சில விடயங்களில் முரண்பாட்டுத் தன்மைகள் இருந்தாலும் கணிசமான விடயங்களில் பொது உடன்பாடு இருக்கிறது. முஸ்லிம்களோ தமிழர்களோ தனித்து நின்று தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் அடைந்து விட முடியாது.

ஆகையினால், பொது விடயங்களில் ஒருமித்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை இரு சமூகங்களுக்கும் இருக்கிறது. முரண்பாடான விடயங்களில் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, தீர்த்துக் கொள்வதே ஆரோக்கியமான வழிமுறையாகும். இதை விடுத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் சாதித்து விட முடியாது. அது புத்திசாதுர்யமான முடிவாகவும் இருக்காது. இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீம் அவர்கள் மிகவும் தெளிவோடு செயற்பட்டு வருகின்றார்.

சாமான்ய முஸ்லிம் மக்கள் இதனை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ரவூப் ஹக்கீம் அவர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தேசியப் பிரச்சினைகளிலும் சரி, சமூகம் சார்ந்த விடயங்களிலும் சரி, தேசிய காங்கிரஸ் கட்சியோ அதன் தலைவர் அதாஉல்லா அவர்களோ இதுவரை ஆற்றியிருக்கின்ற பங்களிப்பு என்ன? முஸ்லிம்கள் தொடர்பிலான எதிர்கால வேலைத்திட்டம் என்ன என்பது பற்றியெல்லாம் பேசாமல் முஸ்லிம் காங்கிரஸை பற்றியும் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றியும் பேசுகின்றனர் என்றால், தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரசும் ரவூப் ஹக்கீமும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டிருப்பதையே பறைசாற்றுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், ரவூப் ஹக்கீம் அவர்களை எவ்வித சந்தேகமுமின்றி பூரண விசுவாசத்துடன் ஏக தலைமைத்துவமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் சவாலுக்குட்பட்ட விடயமாக இருக்கவே இருக்காது என்பதை சபீஸ் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரவூப் ஹக்கீம் அவர்கள் கட்சிக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தலைமை வகிக்கக்கூடிய அனைத்து தகுதிகளையும் ஆற்றல்களையும் கொண்டிருக்கிறார். தேசிய ரீதியில் அனைத்து இனங்களும் மதிக்கக்கூடிய அப்பழுக்கற்ற ஒரு மிதவாதத் தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். சர்வதேச மட்டத்தில் நன்கு அறியப்பட்டிருக்கின்ற ஒரு தேசியத் தலைமையாகவும் இராஜதந்திர தொடர்புகளை பேணக்கூடிய மதிநுட்பமிக்க தலைமையாகவும் அவர் திகழ்கிறார்.

முஸ்லிம் சமூகம் அவ்வப்போது எதிர்நோக்கி வருகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் தேசிய விவகாரங்கள் தொடர்பிலும் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் சர்வதேச மட்டத்திலும் குரல் எழுப்பி வருகின்ற ஒரு துணிச்சல்மிகு தலைவராக ரவூப் ஹக்கீம் அவர்களின் வகிபாகம் இருந்து வருகிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்- என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments: