News Just In

8/24/2022 06:15:00 AM

மணல் வியாபாரத்தில் நிலவும் மாபியா முறைகேடுகளை ஒழித்து நியாயமான சேவைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் நடவடிக்கை!

மணல் வியாபாரத்தில் நிலவும் மாபியாக்களின் தலையீடு மற்றும் முறைகேடுகளை ஒழித்து நியாயமான சேவைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் இஷற்.ஏ. நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அமைச்சின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் வகையில் சுற்றாடல்துறை அமைச்சால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாராந்தம் இவ்வாறான கூட்டங்களை நடாத்துவதற்கு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை(22.08.2022) இடம்பெற்ற அதிகாரிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் கட்டடப்பணிகளுக்குத் தேவையான மண்ணை முறையாக விநியோகிப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மணல் அகழ்வு, அத்தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்னும் அதற்காக அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முறையற்ற மணல் அகழ்வுகள் சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் அதனைத் தடுப்பதற்குரிய வழிவகைகள் குறித்தும் அமைச்சின் உயரதிகாரிகள் அமைச்சருடன் கலந்துரையாடினர்

மணல் அகழ்வுகளால் சாதாரண பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இடைத்தரகர்கள் தலையிடுவதால் விலைகள் தேவையற்ற வகையில் உயர்கிறது.

சாதாரண வீடொன்றைக் கட்டுவதற்கு கூட இவர்களால் மணலை பெற முடியாதுள்ளது. ட்ரெக்டர்கள், லொறிகளில் மணலை ஏற்றுவதை தவிர்த்து ரயில்பெட்டிகள், ரயில் இழுவைப் பெட்டிகளில் ஏற்றுவதற்கும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அதிக மணலை ஒரே தடவையில் கொண்டுவர ரயில்பெட்டிகள் உதவும். காலவிரயம் மற்றும் பொருள் விரயத்தையும் இதனால் தவிர்க்கலாம். மணல் கடத்தலில் நேரடித் தொடர்புடையோரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

.எச்.ஹுஸைன்

No comments: