News Just In

8/19/2022 06:17:00 AM

கப்பல் மூலம் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்!

கப்பல்கள் மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் பயணிகள் முனைய வசதிகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனைய வளாகத்தின் தற்போதைய நிலைமையை பார்வையிட வந்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த வருடங்களில் கிடைத்த தகவல்களின்படி சுற்றுலா பயணிகளின் கப்பல்கள் அதிகளவில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. ஆனால் சமீப நாட்களாக நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக இந்த பயணிகள் கப்பல்களில் வருகை தருவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் வரும் சுற்றுலா சீசனை இலக்காக கொண்டு பயணிகள் முனையம் உள்ளிட்ட வளாகங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.' நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட வாகன தரிப்பிட மண்டபம், சுகாதார வசதிகள், கவர்ச்சிகரமான வரியில்லா வர்த்தக நிலையம், போக்குவரத்து வசதிகள் என்பனவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்த பயணிகள் கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கையின் அனைத்து கப்பல் நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், துறைமுகத்தின் வர்த்தக ஊக்குவிப்பு பிரிவு இணையத்தில் பாரிய விளம்பர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்நியச் செலாவணி திட்டத்திற்கு துறைமுகத்தின் ஊடாக பங்களிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர, இலங்கை துறைமுக அதிகாரசபையின் பிரதித் தலைவர் கயான் அல்கேவத்தகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்த ஆய்வுச் சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.

No comments: