News Just In

8/23/2022 06:22:00 AM

பேராபத்தில் சிக்கப்போகிறது இலங்கை - எச்சரிக்கை விடுத்த பீரிஸ்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய பிரச்சினைக்குள் நாடு தள்ளப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் அல்லது மனித உரிமைகள் எதுவும் மிச்சமிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பல திருத்தங்களைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், முழுச் சட்டமும் மீளாய்வு செய்யப்படும் வரை சட்டத்தை நடைமுறைப்படுத்த அவசரப்பட மாட்டோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களுக்கு தயாராகி வருகின்றது. ஜிஎஸ்பி பிளஸ் சலுகை என்பது நமது நாட்டின் ஏற்றுமதியை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று. பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்தப் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

இந்த சட்டமூலத்தை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். அத்துடன் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அந்த பிரேரணையை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்தோம். அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற கடுமையான சட்டமூலத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகின்றனர்.

வசந்த முதலிகே என்ற மாணவனை தொண்ணூறு நாட்கள் காவலில் வைக்க உத்தரவு கிடைத்தது. இங்கே தீவிரவாதம் என்றால் என்ன? இங்கு எதேச்சதிகாரத்தை நாம் காணவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: