News Just In

7/06/2022 10:58:00 AM

கல்வியியல் கல்லூரி மாணவ ஆசிரியர்களை சொந்த பிரதேசத்திற்கு இணைப்புச் செய்க : இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை




நூருல் ஹுதா உமர்

நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற நிலையினைக் கவனத்திற் கொண்டு தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவர்களை சொந்த பிரதேசத்திற்கு இணைப்புச் செய்யுமாறு கல்வியமைச்சுக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா, செயலாளர் எம்.கே.எம்.நியார் ஆகியோர் ஒப்பமிட்டு கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டிலுள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் ஆறாயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேதனமாக ஐயாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. நாட்டின் தற்போதைய சூழலில் இத் தொகையினால் ஒரு வாரத்தைக் கூடக் கடத்த முடியாதுள்ளது. வெளி மாகாணங்களில் இருந்து வருகை தந்த ஆசிரிய மாணவர்கள் வாடகைக்கு இடங்களைப் பெற்றே தங்கள் பணிகளைத் தொடர வேண்டும். பொருளாதார நெருக்கடியான இக்காலப்பகுதியில் இது மிகவும் கடினமான இலக்காகும்.

இந்நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மாணவ ஆசிரியர்களை சொந்த வலயத்தில் பொருத்தமான பாடசாலையொன்றில் இணைப்புச் செய்ய வழி செய்வதோடு அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவையும் அதிகரிப்புச் செய்யுமாறும் அக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது


No comments: