News Just In

6/08/2022 06:43:00 AM

குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த கல்முனை சாய்ந்தமருது வண்ட் வீதியில் அமைந்துள்ள நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று காலை ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டமானது மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபாகர்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் ஆகியோர் கல்முனை மாநகர சபைக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் மற்றும் கள விஜயத்தினூடாக கண்டுபிடிக்கப்பட்ட விலங்கு கழிவுகளை அகற்றும் நோக்கிலும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான சட்டவிரோத மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் செய்து சுற்றாடலுக்கு பங்கம் விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க கல்முனை மாநகர முதல்வர், ஆணையாளர் உட்பட கல்முனை மாநகர சபை தயாராக இருப்பதாகவும், இந்த வேலைத்திட்டத்தை துரிதகதியில் செய்து மக்களின் நலனுக்காக முன்வந்து இந்தப்பணியை வெற்றிகரமாக செய்ய உதவிய நீர்ப்பாசன திணைக்களத்திட்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்- என்றார்.

இந்த ஆரம்பகட்ட பணியில் நீர்ப்பாசன திணைக்கள அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் எம்.ஐ.எம். இஸட். இப்ராஹிம், கல்முனை பிரதேச நீர்ப்பாசன காரியாலய பொறியியலாளர் என். புவிரஞ்சினி, நீர்ப்பாசன திணைக்கள பொறியியல் உதவியாளர் எம்.ஐ.எம். அமீன், நீர்ப்பாசன திணைக்கள தொழிநுட்ப உதவியாளர் ஈ.எம். ஜெயபோசன், கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், மாநகர சுகாதாரப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யூ.எம். இசாக், சுகாதார மேற்பார்வையாளர் அதுஹம் , சுகாதார ஊழியர்கள், வாகன சாரதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு நிருபர்

No comments: