News Just In

5/24/2022 02:06:00 PM

ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்





நூருல் ஹுதா உமர்

முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் எல்லா மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டு வருகின்றது. ஹரித தேயக் " தேசிய வீட்டுத்தோட்ட யுத்தம் - 2022 செயற்றிட்டத்தின் கீழ் 2.2 மில்லியன் வீட்டுத் தோட்டங்களை இலக்காக கொண்டு தற்போது நாடு முழுவதையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும் " பசுமை நாள் " தேசிய வீட்டுத்தோட்ட யுத்தம் - 2022" நிகழ்ச்சித் திட்டமானது தேசிய ரீதியில் 29.03.2022 ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை 9.18 மணிக்கு சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இவ் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு பயிர்ச் செடிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் திங்கள் கிழமை வரிப்பத்தான்சேனை -03 ஆம் பிரிவில் இடம்பெற்றது.

இவ்வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு நடப்பட்ட மரக்கறி செடிகள் விநியோகம் , விவசாய திணைக்களத்தினால் வழங்கப்படும் விதை பொதிகள் விநியோகம், செடிகள் விநியோகம் தென்னை மரங்கள், மருத்துவ செடிகள் , பழச்செடிகள் , சிறு ஏற்றுமதி பயிர் செடிகள் போன்றவை வழங்கிவைக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு சமாந்தரமாக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி நாற்றங்கால்களால் தயாரிக்கப்பட்ட மரக்கறிச் செடிகள், பயறுப் பொதிகள், இத்திட்டத்திற்கு இணையாக ஒரு வீட்டிற்கு 40 செடிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு நாற்றுமேடைகளில் விதையிடும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் வேரகொட, சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், விவசாய போதனா ஆசிரியர் எஸ்.ஏ.எம். அஸ்ஹர், அமைச்சுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்படபயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்


No comments: