News Just In

5/17/2022 06:30:00 AM

ரஷ்யாவிற்கு மேலும் பின்னடைவு - அடங்க மறுக்கும் உக்ரைன் படைகள்!

ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை மீளவும் தம்வசப்படுத்திவருவதாக உக்ரைனிய தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அண்டை நாடுகள் மேற்கொண்டு வருகின்றமை ரஷ்யாவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பல தசாப்தங்களுக்கு பின்னர் நேட்டோவுடன் இணைவது தொடர்பில் ஸ்வீடனும் முடிவு செய்துள்ளது.

உக்ரைனிய பிராந்தியங்களை அந்நாட்டு படைகள் மீட்டெடுத்து தமது அடையாளங்களை மீளவும் நிலைநாட்டியுள்ளதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினெகுபோ (Oleh Sinegubov) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கிவரும் நிலையில் உக்ரைன், தனது எதிர் தாக்குதல்களை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. இதன்படி ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை உக்ரைன் மீளவும் கைப்பற்றி வருகின்றது.

எனினும் ரஷ்ய படைகளின் கவனம் டொன்பாஸ் பகுதியை நோக்கி திரும்பியுள்ள நிலையில், அங்கு ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்துகின்றது.

பொதுமக்கள் கூடியுள்ள இடங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்துவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறெனினும் ரஷ்யாவின் திட்டமிடப்படாத படையெடுப்பால் உக்ரைன், போரில் வெற்றிபெற முடியும் என நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) கூறியுள்ளார்.

இந்த நிலையில் பல தசாப்தங்களுக்கு பின்னர், நேட்டோ உறுப்பினரை நாடுவது என ஸ்வீடன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மூன்று மணி நேர விவாதத்திற்குப் பின்னர் பொதுமக்களின் ஆதரவை நம்புவதாக பிரதமர் அந்நாட்டு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ கூட்டணியில் சேர விண்ணப்பிக்கவுள்ளதாக பின்லாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஒரு நாள் கழித்து சுவீடன் இதனை அறிவத்துள்ளது.

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக கூறிய நிலையில், நேட்டோ விரிவாக்கம் "கடுமையான தவறு" என்று ரஷ்யா எச்சரித்துள்ள பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: