News Just In

3/21/2022 07:09:00 PM

நீண்ட நேரம் காத்திருந்து சமயல் எரிவாயு சிலிண்டர்களை பெறும் மக்கள்!

நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கை வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம். நியாஸின் முயற்சியினால் இடம்பெற்றது.

லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 180க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் வாழைச்சேனை, பேத்தாழை, கல்குடா, ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.

குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் எரிவாயுக் கொள்வனவு செய்ய வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார் தலைமையில் கேஸ் வினியோகம் இடம் பெற்றது.

கடந்த சில நாட்களுக்கும் மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டிலுள்ள களஞ்சிய சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில், எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையிலிருந்தே குறித்த இடத்தில் காத்திருக்கும் நிலைமை காணப்படுகின்றது.

இந்த எரிவாயுக் கொள்வனவில் சிறுவர்கள் பெண்கள் அதிகளவாக வருகை தந்து பெற்றுச் சென்றதைக்காண முடிந்தது. மேலும் எரிவாயுவைக் கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காத நிலைமையும் காணப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments: