News Just In

3/19/2022 05:09:00 AM

இன மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூவின மக்களும் கள விஜயம் !



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தற்போதைய இனவாத போக்கை மறுதலிக்கும் வண்ணம் இன மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூவின மக்களும் ஒன்றிணைந்து கள விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக மட்டக்களப்பு எஹெட்- கரிற்றாஸ் நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ. கிறிஸ்ரி தெரிவித்தார்.

சிலாபம், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து இத்தகைய நல்லிணக்க கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வந்திருந்த மூவின மக்களுக்கும் ஏறாவூர் ஐயன்கேணிப் பகுதியில் வைத்து பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களால் வியாழக்கிழைம மாலை 17.03.2022 பெரு வரவேற்பளிக்கப்பட்டது.

எஹெட் - கரிற்றாஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதேச மட்ட பல்சமய சமாதானக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் எஹெட் - கரிற்றாஸ் நிறுவனத்தின் பல் சமய ஒன்றியத்துக்கான திட்ட இணைப்பாளர்கள் எஸ். மைக்கல், எம். றொபின்ஸன், கள உத்தியோகத்தர் எஸ். கமல் ஆகியோருடன் கரிற்றாஸ் - செடெக் அகிய நிறுவனங்களின் சிலாபம், புத்தளம் மாவட்டங்களின் சர்வமத சமூக சக வாழ்வு இணைப்பாளர்களும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சகவாழ்வின் முக்கியத்துவமும் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் விளைவால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் பற்றியும் பிரதிநிதிகள் சிலாகித்துப் பேசினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் நட்பின் அடையாளமாக பரஸ்பரம் கஷ்டத்தில் உதவுவோம் எனும் தொனிப்பொருளில் புத்தளம் சிலாபம் சர்வமத சக வாழ்வு ஆர்வலர்களால் ஐயன்கேணி பிரதேச சமாதானக் குழுச் செயற்பாட்டாளர்களுக்கு தேங்காய் உட்பட மரக்கறிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

எஹெட் கரித்தாஸ் நிறுவனம் பல் சமய ஒன்றியத்தை உருவாக்கி இன ஐக்கிய சகவாழ்வு முறையை ஊக்குவிப்பதற்கான செயற் திட்டங்களின் ஒரு அம்சமாக இந்த கள விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




No comments: