News Just In

1/10/2022 12:27:00 PM

மீள முடியாத மரண அடியாக அமையப் போகிறது! இலங்கைக்கு பகிரங்க எச்சரிக்கை!



நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த (Prof.Ananda) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் எனறும் அவர் எச்சரித்துள்ளார்.


கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 699 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும்.இந்த கடன் செலுத்துதலை பிற்போட முடியாது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுமாறு பலர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.


எனினும் அரசாங்கம் தற்போதும் சீனாவிடமே கடனை பெற்று வருகிறது. சீனாவிடம் பெறப்படும் கடன் நிதியை பயன்படுத்தி, அந்நாட்டிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது நாட்டின் சொத்து ஒன்றை எழுதிக்கொடுக்க வேண்டும்.

இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை பெற போகின்றனர். இந்த பணத்தில் மூலம் இந்தியாவில் இருந்து 500 சிறிய பேருந்துகள் மற்றும் பொலிஸாருக்கு தேவையான 750 ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு இவை தேவையா?. இது நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டிய நேரம். நாடு தற்போது ஏல விற்பனை நிலையம் போல் காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமையில் எமக்கு சில மாற்று வழிகள் உள்ளன. பிணை முறி கடன்களை பெற்றுள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை செலுத்துவதற்கு சிறிய காலத்தை அவகாசமாக கோரலாம். அதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.

எமக்கு நெருக்கமான நாடுகள் அப்படியில்லை என்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களிடம் நிவாரண முறையின் கீழ் கடனை பெற வேண்டும். எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தை கண்டு ஏன் அரசாங்கம் இந்தளவுக்கு பயப்படுகிறது என்று புரியவில்லை. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே அந்த நிறுவனம் கடனை வழங்குகிறது.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து டொலர்களையும் மீண்டும் வெளியில் கொண்டு வர நேரிடும். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தொழிலாளர்கள் தமது டொலர்களை அனுப்புவதில்லை.

இதன் காரணமாக நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டொலர்களில் 500 மில்லியன் டொலர் வரை குறைந்துள்ளது. நாட்டின் நிதியில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமை இதற்கு காரணம்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெறும் போது, அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பெறப்படும் கடனை போன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பெறும் கடனை பயன்படுத்த முடியாது.

நிதியை வெளிப்படை தன்மையுடன் பயன்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனில் தரகு பணம் பெற முடியாது. கடனை வழங்கிய பின்னர், நாணய நிதியம் முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ளும்.எனினும் அரசாங்கம் குறுகிய கால இலாபங்களுக்காக முற்றாக திரிபுப்பட்ட பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவதை காண முடிகிறது எனவும் பேராசிரியர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.



No comments: