News Just In

12/01/2021 07:01:00 PM

ஒமிக்ரோன் திரிபு : இலங்கையின் நிலைவரம் மிகமோசமடையலாம் - சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரிக்கை

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின், இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்காலத்தில் மிகமோசமடையக்கூடும்.

ஆகவே மிகமோசமான நிலையைக் கையாள்வதற்கு இப்போதிருந்து தயாராகவேண்டும். அதன் ஓரங்கமாக வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா 19 வைரஸின் ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கையாள்வதற்குத் தயாராக வேண்டியதன் அவசியம் குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது நாளொன்றுக்கு சுமார் 20 பேர் வரையில் உயிரிழக்கின்றனர். ஆனால் உண்மையான தரவுகளின்படி இந்த எண்ணிக்கை மேலும் உயர்வானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன். தடுப்பூசி வழங்கல் மூலம் 50 சதவீதம் வரையில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தமுடியும்.

இருப்பினும் குழந்தைகள் உள்ளடங்கலாக தடுப்பூசி வழங்கல் நூறு சதவீதம் பூர்த்தியடைந்த பின்னரும் பரிசோதனைகளை மேற்கொள்ளல், தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படாவிடின் தொற்றுப்பரவலை முழுமையாக முடிவிற்குக்கொண்டுவர முடியாது.

No comments: