News Just In

10/23/2021 07:07:00 AM

இந்தியாவிற்கு எதிரான போராட்டமல்ல : இரு நாடுகளின் இணக்கத்தை நடைமுறைப்படுத்துவதே எமது கோரிக்கை - சுமந்திரன்


இந்தியாவிற்கு எதிராக மீனவர் போராட்டம் நடத்தப்பட்டதாக பொய்யான பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, எனினும் இழுவை மடி தொழில் கூடிய விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை, இந்திய கூட்டறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தி எமது வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் நேற்று வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(22) ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட 2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில், எமது வளங்களை பாதுகாக்கும் விடயங்கள் குறித்தும் நான் கவனம் செலுத்த விரும்புகின்றேன், குறிப்பாக வடக்கின் கடல் வளங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் நாம் கடலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தோம்.

குறிப்பாக இழுவை படகு மீன்படி மூலமாக கடல் படுக்கைகள் முழுமையாக அழிக்கப்படுகின்றது. அத்துடன் கடல் வளங்கள், கற்பாறைகள் முழுமையாக அழிக்கப்படுகின்றது. இது அடுத்த பரம்பரைக்கு மீன் வளம் இல்லாது போகும் நிலைமை உருவாக்கிக்கொண்டுள்ளது.

இதனை நிறுத்துமாறு 2013ஆம் ஆண்டில் தனியார் சட்டமூலம் ஒன்றினை கொண்டுவந்தேன், எனினும் நிறைவேற்ற முடியாது போய்விட்டது, பின்னர் 2016ஆம் ஆண்டில் தனியார் சட்டமூலம் ஒன்றினை முன்வைத்தேன், அதனை அரசாங்கத்தின் சட்டமாக கொண்டுவந்து நிறைவேற்றினர். அதன் பின்னர் இந்தியாவுடன் நாம் இது குறித்து பேசினோம். நானும் அந்த கூட்டங்களில் கலந்துகொண்டேன். அது குறித்த அறிவிப்புகள் உள்ளன.

இவற்றில் முதலாவதாக அவர்கள் ஏற்றுக்கொண்டது என்னவென்றால், இழுவை மீன்பிடி முறைமையை நிறுத்துவதாக இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தனர். ஆனால் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்னும் அது தொடர்கின்றது.

இந்தியாவிற்கு எதிராக மீனவர் போராட்டம் நடத்தப்பட்டதாக பொய்யான பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே 2016ஆம் ஆண்டில் இந்திய வெளிவிவகார அமைச்சு நவம்பர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையின் பிரதியை சமர்பிக்கின்றேன்.

இதில் இழுவை மடி தொழில் கூடிய விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் எந்த வேறுபாடும் கிடையாது. எனினும் இந்திய தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் செயலாளர் கூட கூறியுள்ளார்,

இது தடைசெய்யப்பட வேண்டும், அது எமக்கு தெரியும், இந்த போராட்டத்தில் நியாயம் உள்ளது என்பதும் எமக்குத் தெரியும், ஆனால் இது துக்கத்தை தருகின்றது, எமக்கு இதனை செய்ய அனுமதியுங்கள் என ஜேசுராஜா தெரிவித்துள்ளார். ஆனால் அவரே இதன் பாரதூர தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதேபோல் வடக்கு கிழக்கில் மணல் அகழ்வு இடம்பெற்றுக்கொண்டுள்ளது, கிழக்கில் இது தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுள்ளதாக எமது உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்,

வடக்கிலும் இது இடம்பெறுகின்றது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இந்த மணல் அகழ்வு செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. நான் இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தேன், அப்போது எனது கண்களால் இதனை அவதானித்தேன்.

தனியார் நிலங்களில், உரிமையாளர்கள் இருக்கும் நிலையில் இந்த அகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இதனை உரிமையாளர்கள் எதிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொலிசில் முறையிட்டால் மணல் கொள்ளையாளர்களின் மூலமாக அச்சுறுத்தப்படுகின்றனர். ஆகவே பொலிசாரின் ஒத்துழைப்புடன் இந்த மணல் கொள்ளை இடம்பெற்றுக்கொண்டுள்ளது. உள்ளூர் படகாளர்கள் ஐந்தாயிரம் ரூபாவை அமைச்சருக்கு கொடுத்து இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.

No comments: