News Just In

8/31/2021 01:03:00 PM

வட்டமடுவில் முடியும் என்றால் பொது மயானத்தில் ஏன் முடியாது?


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கொரோனா தொற்றுக்குள்ளான உடலங்களை அடக்கம் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட கிண்ணியா வட்டமடு பிரதேசம் அதற்கு பொருத்தமானதா? என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம். எம் . மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (31) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கொரோனா தொற்று காரணமாக மரணிக்கின்ற உடலங்களில் இருக்கும் வைரஸ் நீலக்கீழ் நீர் மூலமாக பரவக் கடியது எனும் காரணத்தை முன் வைத்து அவ்வுடலங்களை எரித்தே ஆகவேண்டும் என்று நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

உலக சுகாதார நிறுவனத்தினாலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாலும் அடக்கம் செய்ய முடியும் என பரிந்துரைகள் செய்யப்பட்ட போதும், மக்களால் பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்பட்ட போதும் அதற்கு முரணாக நூற்றுக்கணக்கான உடலங்கள் கட்டாயத்தின் பேரில் தகனம் செய்யப்பட்டன.

சர்வதேச நாடுகள், ராஜதந்திரிகள் என பல்வேறு உயர் மட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் கொரோனா உடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

அது மாத்திரமன்றி நீர்நிலைகளில் இருந்து மிக தூரமானதாகவும் நிலத்தடி நீரானது 20, 22 அடிகளுக்கு கீழே இருக்கக் கூடியதுமான இடங்களில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட முடியுமென்று நிபந்தனைகளும் கூட விதிக்கப்பட்டிருந்தது.

இந் நிபந்தனைகளின் அடிப்படையில் பார்க்கின்ற போது கிண்ணியா பிரதேசத்தில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள வட்டமடு பிரதேசம் எந்த அடிப்படையில் பொருத்தமாக அமைய முடியும்?.

இந்த இடம் சுங்கான் குழி குளத்தின் நீரேந்து பிரதேசமாகவும் குளத்திற்கு மிக அண்மித்ததாகவும் நிலக்கீழ் நீர் மிக குறுகிய ஆழத்தில் காணப்படுவதாலும் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுக்கு நிச்சயமாக இப்பிரதேசம் உட்படப் போவதில்லை. அப்போது முடியாது என்றால் இப்போது எப்படி முடியும்? நாடகமா அரங்கேற்றப்படுகிறது ?

குளத்து நீர் நேரடியாக பாதிக்கப்படும் என தெரிந்து கொண்டும் இந்த இடத்திற்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்களினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களத்தினதும் சிபாரிசுகள் எப்படி கிடைக்கப்பெற முடியும்? என்பதில் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய சூழ்ச்சிகள் ஏதும் இருக்கலாமோ என பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.

எவ்வாறாயினும் தெரிவு செய்யப்பட்ட இந்த இடத்தை கொரோனா உடலங்களை அடக்குவதற்கு சிபாரிசு செய்ய முடியும் என்றால் வழமையாக நல்லடக்கம் செய்யப்படும் பொது மையவாடிகளை ஏன் சிபாரிசு செய்ய முடியாது ? என கேட்கின்றேன் என்றும் அவ்வூடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: