News Just In

8/14/2021 12:16:00 PM

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...!!


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் அருட்பணி த.ஜீவராஜ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வானது இன்று(14) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண தொழில்நுட்ப கல்லூரியில் நினைவு கூறப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளார் 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவில் லூசியா மாகாணத்தில் பிறந்து இயேசு சபை துறவியான இவர் 1941 ஆம் ஆண்டு தனது 17 வது வயதில் இயேசு சபை துறவியாக தன்னை இணைந்துகொண்டதுடன், இயேசு சபை ஆரம்ப குருத்துவ பயிற்சியை பெற்றதன் பின்னர் தன்னார்வ மறைப் பணியாளராக பணியாற்றுவதற்காக முன்வந்ததுடன், இவர் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இயேசு சபை கல்லூரிகளில் பணியாற்றிய இவர் அதன் பின்பு 3 வருடங்கள் இந்தியாவில் உள்ள பூனா நகரத்தில் இறையியலை பயின்று, இவர் பின்னர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு மீண்டும் இலங்கைக்கு வருகை தந்து 1971 ஆம் ஆண்டு மட்டக்களப்பிலுள்ள கிழக்கிலங்கை தொழில்நுட்ப கல்லூரியில் இயேசு சபைத் துறவி அருட்பணி லோயிட் லோறியோ அடிகளாருடன் சக ஊழியராக பணியாற்றியுள்ளார்.

இந் நிலையில் அதன் பிற்பாடு தொடர்ந்து பல்வேறு வகையான சேவைகளை மக்கள் மத்தியில் ஆற்றிவந்த இவர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றியிருந்தார்.

உரிமை மறுக்கப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்து செயற்பட்டுள்ளார்.

1985 - 1990 வரை கிழக்கு மாகாண தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குனராக பணியாற்றிய இவர் 1990 ஆம் ஆண்டு வாழைச்சேனைக்கு சென்று திரும்பும் வழியில் ஏறாவூர் பகுதியில் வைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் இயேசு சபைத் துறவிகளும், கல்லூரியின் பணியாளர்கள், பழைய மாணவர்கள் உட்பட மாணவர்களும் கலந்துகொண்டு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததுடன், ஈகைச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.














No comments: