News Just In

7/06/2021 03:29:00 PM

மட்டக்களப்பில் உள்ள கொவிட் வைத்தியசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள கொரோனா நோயாளர்களின் நலன் கருதி ஒட்சிசன் சிலிண்டர்களும் ரெகுலேற்றர்களும் வழங்கிவைப்பு...!!

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள 20 கொவிட் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொவிட் தொற்றிற்குள்ளானவர்களின் நலன் கருதி அமெரிக்க யூத உலக சேவை (AMERICAN JEWISH WORLD SERVICE) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் கிழக்கு மாகாண பங்காளர் அமைப்புக்களின் உதவிகளுடனும் 7.7 மில்லியன் ரூபாய் பெறுமதி கொண்ட 100 ஒட்சிசனுடன் கூடிய சிலிண்டர்களையும், 100 ஒட்சிசன் றெகுலேற்றர்களையும் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 6 வைத்தியசாலைகளுக்காக 45 ஒக்சிஜன் சிலின்டர்களையும் 48 ரெகுலேட்டர்களையும் இன்று (06) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை ஒன்றுகூடல் மண்டபத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி மயூரி ஜனன் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வின்போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்களினால் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொவிட்டின் 3வது அலைத் தாக்கமானது குறிப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது, இந்நிலையில் கொவிட் தொற்றாளர்களுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு இவ் ஒக்சிஜன் தேவையுள்ளதனை பிராந்திய சகாதார சேவைகள் பணிமனையின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் 45 ஒக்சிஜன் சிலின்டர்களையும் 48 ரெகுலேட்டஸ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் அச்சுதன், கிழக்கு மாகாண சுற்றுலாத்துரை தவிசாளர் ஹரிப்பிரதாப் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டதோடு மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் உள்ளிட்ட வலயமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
















No comments: