News Just In

7/18/2021 02:55:00 PM

பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சமூக சேவையாளரும் சமாதான ஆர்வலருமான குருகுலசிங்கம் காலமானார்...!!


(ஏ.எச்.ஏ. ஹஸைன்)
பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சமூக சேவையாளரும் சமாதான சகவாழ்வு ஆர்வலருமான மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த ரீ.ஜீ. குருகுலசிங்கம் காலமானார்.

சமீப சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் தனது தனது 77வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னாரது பிரேதம் சனிக்கிழமை 17.07.2021 வாகரை புனித பேதுறு றோமன் கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கைப் போக்கு வரத்துச் சபை முன்னாள் அதிகாரியான அமரர் குருகுலசிங்கம் மனித உரிமைகளுக்காகவும் சமாதான இன ஐக்கிய செயற்பாடுகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றியவர் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வாகரை பிரதேச முதியோர் சம்மேளன பொதுச் செயலாளராகச் செயற்பட்ட அவர் வாகரைப் பிரதேசத்தில் அநாதரவான நிலையில் மர நிழல்களிலும் மத வழிபாட்டு இடங்களிலும் காலங்கழிக்கும் முதியோருக்கு அபயக் கரம் நீட்டுமாறு கிழக்கு மாகாண ஆளுநரி;டம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளராகச் செயற்பட்ட அவர் கதிரவெளி - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு அதன் நன்மைகள் விவசாயிகளுக்குக் கிட்ட வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டிருந்தார்.

மேலும் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதக் குழுவின் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய அவர் வாகரையில் கத்தோலிக்கரல்லாத எனைய விசுவாசத் தரப்பினருக்காக அவர்களது உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கித் தரப்படவேண்டும் என்று போராடி அதற்கான காணியையும் முன்னின்று பெற்றுக் கொடுத்தவர் என்று அந்த சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அமரர் குருகுலசிங்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன ஐக்கிய சமாதான சகவாழ்வுக்காக தனது கருத்துக்களை முன்வைத்து நிகழ்வுகளில் பங்கெடுத்து வந்தவர் என்று தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

No comments: