News Just In

7/27/2021 03:55:00 PM

37 வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த ஆண்டிலே மேலோங்கியிருக்கின்றது- பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா!!


எமது தலைவர்கள் வெலிகடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தினத்தை தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் கறுப்பு ஜுலை தினமாகக் கடந்த 37 வருடங்களாக நினைவு கூர்ந்துவருகின்றோம். ஆனால், இந்த 37 வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த ஆண்டிலே மேலோங்கியிருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடாத்துவதற்கு பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜுலை 23 தொடக்கம் 27ம் திகதி வரை கறுப்பு ஜுலை என்பது இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் அகல முடியாத, அகற்ற முடியாத ஒரு கரிநாளாக பதிந்து கிடக்கின்றது. இந்த நாளை தமிழின அழிப்பின் உச்ச கட்டமாகவே நாங்கள் பார்ப்பதோடு, கறுப்பு ஜுலையாக இதனை நாங்கள் நினைவு கூருகின்றோம்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடங்கியது. பல்லாயிரக் கணக்காண தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் பூர்வீக இடமாகிய வடக்கு கிழக்கிற்கு பாதையூடாக வரமுடியாமல் கப்பல் மூலமாக மக்களை அனுப்பிய நாட்கள் அது.

அதன் பின்னர் போராட்டத்தைத் தொடங்கிய தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணியுடன் அரசியற் கைதிகள் பலர் உட்பட 53 பேர் ஜுலை 25 மற்றும் 27ம் திகதிகளில் வெலிக்கடை சிறையிலே இலங்கை பாதுகாப்புப் படையின் ஆதரவு மற்றும் அனுசரணையுடன் ஏனைய கைதிகளினால் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தனக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் போது என்னைத் துக்கிலிடுவதன் மூலம் ஒரு குட்டிமணியைத் தான் அழிப்பீர்கள் இதன் மூலம் ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் போராட்டத்திற்கு வருவார்கள் அவர்கள் மூலம் தமிழீழம் மலரும் அதனைப் பார்ப்பதற்கு என் கண்கள் இருக்க வேண்டும். எனவே என் கண்களைப் பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்குத் தானம் செய்து விடுங்கள். அந்தக் கண்கள் மூலமாக மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன் என்று குட்டிமணி தெரிவித்தார். அந்தக் கருத்திற்காக குட்டிமணியின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு சப்பாத்துக் கால்களில் இட்டு நசுக்ககப்பட்ட வரலாறுகளும் அந்தச் சிறைச்சாலையிலே நடைபெற்றன.

இந்தத் தினத்தை தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் கறுப்பு ஜுலை தினமாகக கடந்த 37 வருடங்களாக நினைவு கூர்ந்து இந்த ஆண்டு 38வது ஆண்டாக நினைவு கூருகின்றோம். இந்த 37 வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த ஆண்டிலே மேலோங்கியிருக்கின்றது. இந்த நினைவு தினத்தை நினைவு கூறக்கூடாது என்று அவர்கள் நினைவான பதாதைகள் கிழித்தெறியப்படுவது மாத்திரமல்லாமல். நீதி மன்றத் தடையுத்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலே எனக்கும், எமது கட்சியின் உபதலைவரும் முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா அவர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

1983ம் ஆண்டு நடைபெற்ற ஜுலைக் கலவர இன அழிப்பும், வெலிக்கடை சிறைச்சாலையினுள்ளே நடந்த படுகொலைகளும் உலகம் அறிந்த உண்மை. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசு இந்த நினைவு தினத்தை நினைவுகூரக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றார்கள்.

1983ம் ஆண்டு இவர்கள் சார்ந்த கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அந்த நேரத்தில் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற போர்ப்பிரகடணமானது இன்னொரு நாட்டுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தைப் போன்று தன் நாட்டுக்குள்ளேயே உரிமைக்காகப் போராடும் மக்களுக்கெதிராகச் செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.

அந்த அரசு 1983ம் ஆண்டிற்குப் பின்பு பல தடவைகள் இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கூட இந்தக் கறுப்பு ஜுலை தினத்தை நினைவுகூருவதற்கு எத்தடையும் விதிக்கவில்லை.

அதற்கு மேலாக சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது கறுப்பு ஜுலைப் படுகொலைக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டிருந்தார். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நட்டஈடும் வழங்கியிருந்தார். அவ்வாறு கடந்த கால அரசாங்கங்கள் மன்னிப்புக் கேட்டதும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்க காலத்தில் இதற்குத் தடை விதிக்காமல் இருந்ததும் தங்கள் தவறுகளை உணர்ந்ததாலும், இந்த நினைவுகூரல்கள் நியாயமானது என அவர்கள் எண்ணியதாலுமேயாகும்.

ஆனால் இன்று இந்த கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசு தன்னுடைய கட்சி சார்ந்த அரசு அந்த நேரம் இல்லாதிருந்த போதிலும் தற்போது கடந்த காலங்களில் நடந்த இவ்வாறான சம்பவங்களை நினைவுரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

அதாவது கடந்த காலங்களில் நாங்கள் செய்த அநியாயங்களை, அட்டூழியங்களை, படுகொலைகளை, சொத்து உட்பட பல அழிப்புகளையும் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட வேண்டும் என்று கூறுவது போலவே எமது நினைவுகளுக்கான தடைகளை விதித்துக் கொண்டிருக்கினள்றார்கள். இதற்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார்கள்.

நீங்கள் இன்று சீனாவில் எதிர்க்கட்சி இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரல் இல்லாமல் அரசு செய்வதை எதிர்த்துக் கதைக்க முடியாமல் ஒரு ஆட்சி இருப்பதைப் போன்று இந்த நாட்டிலும் இராணுவ ஆட்சியை, இராணுவ மயமாக்கும் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றீர்கள் என்பதைத் தான் நாங்கள் இதன் மூலம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

எது எவ்வாறிருந்தாலும் கடந்த காலங்களிலே நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தனங்கள், 2009 மே மாதம் செய்த இனஅழிப்புகள், மாறி மாறி வந்த அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட 1957 கலவரம், 1978 கலவரம், உக்கிரமடைந்த 1983ல் நடைபெற்ற இன அழிப்பு போன்றனவற்றை நாங்கள் மறந்துவிடப் போவதில்லை என்பதோடு 1983ம் ஆண்டு செய்த இனஅழிப்புதான் தமிழ் மக்கள் மத்தியிலே, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவர்களைப் போராட்டத்திற்கு வீறுகொண்டு எழ வைத்தது என்பதை உணர வேண்டும். அவ்வாறான ஒரு நிலைமையை மீண்டும் இந்த அரசு ஏற்படுத்த முனையக் கூடாது.

தமிழ் மக்கள் கொண்டிருக்கும் விரக்தியை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு தமிழ் மக்களுக்கு நியாயமான நீதியான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியற் தீர்வுத் திட்;டத்தை வழங்குவதன் ஊடாக தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளே தவிர அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினாலேயே எதிர்காலத்தில் இந்த நாட்டைச் சுபீட்சமாக்க முடியும்.

இந்த நாடு சுபீட்சமாக வேண்டுமோ அல்லது கடந்த காலங்களைப் போல அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டுமோ என்பது இந்த அரசாங்கத்தின் கையில் தான் இருக்கின்றது என்று தெரிவித்தார்.

No comments: