News Just In

6/20/2021 09:01:00 AM

பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை...!!


நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில், பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவான பயணிகளுக்கான கட்டணத்தை தாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் உட்பட ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் எமது நிலைப்பாட்டை விளக்கப்படுத்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இது தொடர்பில், அமைச்சர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினருடன், அனைத்து சங்கங்களும் இணைந்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,

பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கத்தினருடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்படப்போகும் நட்டம் குறித்து அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் சம்பந்தப்பட்ட சங்கங்கள் கட்டண அதிகரிப்பை மாத்திரம் தீர்வாக கருதவில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. எனினும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் அவர்களுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

இந்நிலையில், பேருந்து கட்டணங்களை அதிகரிக்காமல், அவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை வழங்குவது குறித்து அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments: