News Just In

12/23/2020 09:58:00 AM

மட்டக்களப்பு- ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் 31 விவசாயிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வயல் பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

வயல் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களை காப்பாற்றும் நடவடிக்கையினை இன்று செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகம் மேற்கொண்டது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிளர்ச்சிமடு, ஆத்துச்சேனை போன்ற பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு 10 அடிக்குமேல் சென்ற நிலையில் அப்பகுதிகளில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்த ஓட்டமாவடி, கிரான் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த விவசாயிகள் 31 பேர் இன்று ரிதிதென்னை பிரதான வீதிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் வேண்டுகோளுக்கமைய பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸின்; வழிகாட்டலில் தனியாரின் சிறிய படகு மூலம் இந்த 31 பேரும் பாதுகாப்பான முறையில் ரிதிதென்னைபிரதான வீதிக்கு கொண்டு வரப்பட்டனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த நான்கு பேரும் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 27 பேருமாக 31 பேர் வயல் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் காப்பாற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

No comments: