
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
ஓட்டமாவடி பிரதேச சபையில் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் ஒரு தொகுதியினரை செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தி விட்டதாகவும், தொண்டர் அடிப்படையிலேனும் மீண்டும் பணிகளில் இணைத்துக் கொள்ளுமாறு பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சபையில் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுடனான கலந்துரையாடல்கள் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் அனைத்து பிரிவுகளிலும் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் பங்குபற்றினார்கள்.
அரசாங்கத்தின் கொரோணா தொற்று பாதுகாப்பு சட்டதிட்டங்களுக்கமைய அலுவலகம் மற்றும் நூலகங்களின் பணிகளும், ஆளணிகளையும் மட்டுப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதையும் திண்மக் கழிவகற்றல், சுகாதாரம், குடிநீர் வழங்கல், காவலாளிகள் போன்றவற்றின் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதனையும் செயலாளர் குறிப்பிட்டதோடு, கொரோணா தொற்றினால் பிரதேச சபைக்கு ஏற்பட்டிருக்கும் வருமான வீழ்ச்சி தொடர்பாக விபரமாக செயலாளர் விளக்கி கூறினார்.
நிதி நிலவரத்தினை புரிந்து கொண்ட அனைத்து ஊழியர்களும் தமது சம்பளக் கொடுப்பனவின் ஒரு பகுதியினை விட்டுக் கொடுப்பதற்கு தாமாக முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை வரவேற்ற செயலாளர் சபையின் பணிகளும், உங்களது வாழ்வாதாரமும் முடிந்தவரை பாதிக்கப்படாத வகையில் பொருத்தமான பணி ஒதுக்கீட்டையும், சபையின் நிதி நிலவரத்திற்கேற்ற கொடுப்பனவினையும் வழங்க தாம் முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் ஒட்டு மொத்த மனிதர்களும் உயிரைக் காத்துக் கொள்ள வீடுகளில் அடைந்து கிடக்கும் போது தமது உயிரையும், தமது குடும்பத்தின் பாதுகாப்பiயும் கருத்திற் கொள்ளாது இப்பிரதேச மக்களின் நலனுக்காக இரவு, பகலாக அர்ப்பணிப்புடன் தம்மை தியாகம் செய்து சபையின் திண்மக்கழிவு, சுகாதார பிரிவுகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு சபையின் சார்பிலும், பிரதேசத்தின் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இறுதியாக செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தின் கல்குடா முஸ்லிம் சமூகத்திற்கு கீழ்வரும் வினயமான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
மழை, வெள்ளம், வரட்சி, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்று நோய் அபாய காலங்களிலெல்லாம் உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் சுகதார, திண்மக் கழிவகற்றல், குடிநீர் விநியோகம், வீதி, வடிகான் பணியாளர்களும், சாரதிகளும் மிகக் குறைந்த கொடுப்பனவுடன் எமது மக்களுக்காக தம்மை தியாகம் செய்து பணியாற்றி வருகின்றனர். விசேடமாக தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் நோயத் தொற்றும், உயிராபத்தும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ள சூழ்நிலைகளில் இந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
இவர்கள் தமக்கோ, தமது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினரின் உயிரையும் பொருட்படுத்தாது மாதாந்தம் 15000த்திற்கு உட்பட்ட தொகையினை கொடுப்பனவாக பெற்று பணிபுரிந்து வருகின்றார்கள். வழங்கப்படக் கூடிய தர்மங்களும், நன்கொடைகளும், உதவி, ஒத்தாசைகளும் பெறக்கூடிய வகுதியினரில் இவர்களே முதன்மைப்படுத்தப்பட வேண்டியவர்கள். இவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வது சமூகத்தின் கடமையாகும். இதற்காக உங்களுடைய நிறுவன, தனிப்பட்ட உதவிகளை எமது ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஊடாக வழங்கியுதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார்.
No comments: