News Just In

3/03/2020 04:59:00 PM

மட்டக்களப்பில் இரவு தூக்கத்திலிருந்த பெண் மீது வாள் வெட்டு

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் நேற்று (02.03.2020) இரவு பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டினால் குறித்த பெண் இன்று இன்று காலை மயக்கமுற்ற நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே இவ்வாறு மிக மோசமான படுகாயங்களுக்குள்ளாகி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் சென்றுள்ளதால் தனது மூன்று பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்புடன் வசித்துவந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை 02ம் திகதி இரவு குறித்த தாயும் பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்தவேளையில்

வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் வீட்டின் கூரைவழியாக ஓடுகளை கழட்டிக்கொண்டு இறங்கிய மர்ம நபர், உறக்கத்திலிருந்த பெண்ணை கூரிய கத்தியினால் தலையிலும் கையிலும் வெட்டியுள்ளார். காயமுற்ற பெண் மயக்கமுற்றதும் இறந்துவிட்டார் என எண்ணி குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: