News Just In

2/13/2020 10:22:00 PM

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இடம்பெறவுள்ள "நூறு கோடி மக்களின் எழுச்சி" நிகழ்வு!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நூறு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வை கோலாகலமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாக எழுச்சிக் குழுவின் இணைப்பாளர் அனுராதா இராஜரெட்ணம் தெரிவித்தார்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வீடுகளை, சமூகங்களை, நாடுகளை, உலகை உருவாக்கும் விழிப்புணர்வு எழுச்சியே இதுவென்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தேசிய எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பு மட்டக்களப்பு கல்லடி வாவி பாலத்தில் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 14) அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அனுராதா இந்நிகழ்வில் வன்முறையற்ற வாழ்வுக்காய் ஆதங்கம் கொள்ளும் அனைத்து ஆர்வலர்களையும் பங்குபற்றுமாறு அழைப்பதாகவும் தெரிவித்தார்.

'வன்முறைகளற்ற மகிழ்வான வாழ்வுக்காய் ஆடுவோம், பாடுவோம், பறையறைவோம், படம் வரைவோம்' எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அனுராதா விவரித்தார்.

வன்முறைகளற்ற மகிழ்வான வாழ்வுக்காய் அன்பு, மதிப்பு, சமத்துவ உரிமை, விடுதலை நோக்கியதான குறிக்கோளுடன் இந்த விழிப்புணர்வு எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

உலகில் மூன்றில் ஒரு பெண் வன்முறைக்குள்ளாகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று தரவுகளைச் சுட்டிக்காட்டிய அனுராதா மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் நலனுக்காகப் பணியாற்றும் ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் வருடாந்தம் பெண்களும் பெண் பிள்ளைகளும் பாதிக்கப்படுவதான சுமார் 300 முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.

பெண்களுக்கெதிரான இத்தகைய வன்முறைசார்ந்த மனப்பாங்குகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதே தமது விழிப்புணர்வு எழுச்சி நிகழ்வின் நோக்கமாகும் என்றும் அனுராதா வலியுறுத்தினார்.

No comments: