News Just In

1/11/2020 07:59:00 AM

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை இந்தியா கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 (T20) போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த லோகேஷ் ராகுல் மற்றும் ஷிகர் தவன் அதிரடியாக ஆடி இலங்கை அணியின் பந்து வீச்சாளரை திணறடித்தனர். இருவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.

97 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. தவன் 52(36) ரன்களும், ராகுல் 54(36) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். அதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 6(2) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல ஸ்ரேயாஸ் ஐயர் 4(2) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதன் பிறகு மனிஷ் பண்டேவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடினார். இரண்டு ரன்கள் எடுக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக 26(17) ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி அவுட் ஆனார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி திரும்பி சென்றார்.

ஒரு பக்கம் தொடர்ந்து ஆடிய மனிஷ் பாண்டே 31(18) ரன்கள் எடுத்தார். மறுபுறம் சர்துல் தாக்கூர் 8 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இறுதியாக இந்திய 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் லக்ஷான் சந்தகென் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில், 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் சர்துல் தாகூர் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தியாவும் இலங்கையும் இதற்கு முன்னர், இதே மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியை 101 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments: