
மட்டக்களப்பு மாநகர சபையின் சட்டத்தை மீறி நடந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட சம்பவம் ஒன்று அண்மையில் நடந்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையானது முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் வழிப்படுத்தலின் கீழ் பல தரப்பட்ட மக்கள் பணிகளை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமான பணி மக்களின் சுகாதாரத்தினை பேணும் பொருட்டு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு பரவும் இடங்களை இனங்கண்டு துப்பரவு பணி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளத்தை அப்புறப்படுத்தல், மயான சுத்தப்படுத்துதல், வீதி சுத்தப்படுத்துதல் மற்றும் கழிவு முகாமைத்துவம் என பல வழிகளில் சேவை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.
இவ்வாறு பல சேவைகள் மக்களுக்காக வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் அதனை அலட்ச்சியப்படுத்தும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உதாரணமாக மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் பல நடுத்தர மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர், அவர்களின் குடிமனைகளில் வெள்ளம் புகுந்த போது, பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர், வெள்ளம் தேங்கி நிற்பதற்கான வழியினை இல்லாமல் செய்து நீரை கால்வாய் மூலமாக ஓடவிடுவதற்கு வழிவகை செய்யப்படும் போது..
பண வசதிகளுடன் இருக்கின்ற சில நபர்களின் மாநகர அனுமதி பெறப்படாமல் இருக்கின்ற மதில்கள் தடையாக இருக்கின்றது, அத்துடன் அதன் அருகாமையில் கால்வாய் வெட்ட முனைந்தாலும் குறித்த நபர்கள் அதனை தடுக்க முற்படுகின்றனர். இதனால் சாதாரண ஏழையின் வீடு நீரில் மூழ்குகின்றது.
மேலும் மாநகர சபை அதிக காலமாக பராமரிப்பார் அற்று காணப்படும் காணிகளுக்கு அதனை சுத்தப்படுத்த சொல்லி கட்டளை பிறப்பிப்பதுடன், அக்காணிகளில், சுத்தம் செய்யக் கோரிய பதாதை ஒன்றையும் வைக்கின்றது.
அவ்வாறு வைத்து குறித்த நாளைக்குள் அக்காணி சுத்தப்படுத்தப்பட்டால் மாநகர சபையால் எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை, தவறும்பட்ஷத்தில் மாநகர சட்டம் குறித்த காணியின் உரிமையாளருக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு பராமரிக்கப்படாத காணி உரிமையாளர் ஒருவர் குறித்த நாட்களுக்குள் அதனை துப்பரவு செய்யாதது மாத்திரம் அன்றி மாநகர சட்டத்தினை புறக்கணிக்கும் வகையில் நடந்தமையால், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.
இவாறு பொறுப்பற்று நடப்பவர்களால் ஏனைய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது , வெள்ளம், டெங்கு காய்ச்சல் போன்ற பல இடர்களுக்கு அனைத்து மக்களும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது
மாநகர சபையானது ஏழை, பணக்காரன், அரசியல் பேதமின்றி பல சேவைகளை செய்யும் போதிலும் சில சமூக நலனில் ஆர்வம் குறைந்த நபர்கள், அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் மாநகர சபையையும் அதன் முதல்வர் மற்றும் அங்கத்தவர்களை விமர்சித்து தூற்றியும் வருகின்றனர்.
இருப்பினும் பல மக்கள் சபையின் சேவைகளை புரிந்து அதன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தாங்களும் ஒருவராக பணியாற்றுகின்றனர், இதனை இந்த வெள்ளப் பாதிப்பின் போது அவதானிக்கக் கூடியதாக இருந்தது, தங்களது மதில்களை உடைத்தது வெள்ளத்திற்கு வழிவிட்ட நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மாநகர முதல்வர் சரவணபவன் அவர்களின் தலைமையின் வாயிலாக பல நல்ல செயத்திட்டங்களை மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது, கடந்த காலங்களைக் காட்டிலும் ஒரு ஒழுக்கத்துடன் கூடிய மக்களின் பாதுகாப்பினை இலக்காகக் கொண்டு முதல்வர் அவர்களால் நிருவாக முகாமைத்துவம் நெறிப்படுத்தப்பட்டு வருவதனை அவதானிக்கலாம்.
சேவையினை பாராட்ட மனம் இல்லாது விட்டாலும், விமர்சிக்காமல் இருந்து மக்களின் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பதே மாநகரத்தினதும், ஒவ்வொரு சமூக பொறுப்பாளரதும் அவாவாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: