News Just In

11/05/2019 07:31:00 AM

வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி அரபா நகர் பிரதேசத்திலிருந்து தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (04) உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

நாவலடி அரபாநகர் பிரதேசத்தின் வீட்டுத் திட்டத்தில் பணியாற்றி வந்த மருதமுனையைச் சேர்ந்த முஹமட் மீரான் மின்ஹாஜ் (29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நாவலடி அரபா நகர் பிரதேசத்தைச் சேர்ந்தவருடன் குறித்த நபருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு அழுகுரல் சத்தம் கேட்டதையடுத்து அயலவர்கள் சென்று பார்த்தபோது குறித்த நபர் தீயில் எரிந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: