News Just In

10/18/2019 09:57:00 PM

கரடியனாறு-கரடியன்குளம் பகுதி மக்களின் நீர்த்தேவைக்காக பொதுக்கிணறுகள் திறந்துவைப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள கரடியான்குளம் பகுதியில் Harrow - London மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்ட பொதுக் கிணறுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (18) காலை களுவாஞ்சிகுடி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த சக்தி S.ஜீவமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.உமாசங்கர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.ஜெய்கிருஸ்ணா, கரடியானாறு மகா வித்தியாலய அதிபர் இ.செந்தில்நாதன், சமூக நலப் பணியாளர் கே.துரைராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.

மக்களின் நீர்த்தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக 03 பொதுக் கிணறுகள் மக்களின் பாவனைக்காக இதன்போது அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டன. திறமையுள்ள வறிய மாணவர்கள் 12 பேருக்கான துவிச்சக்கர வண்டிகள், 21 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  21 தாய்மாருக்கான உடுதுணிகள், அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு, பொறியியல் துறை, மருத்துவத்துறை, கலைத்துறை பிரிவுகளில் கற்கும் மாணவருக்கான மாதாந்த கொடுப்பனவும் இந் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.

Harrow - London மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பில் இவற்றுக்கான நிதி அனுசரணைகளை லண்டனில் வதியும் திருமதி சிவசக்தி சிவநேசன், சிவதீபன் பற்குணராஜா ஆகியோர் வழங்கியிருந்தனர்.

சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் மீனவர் சங்க பிரதிநிதிகள் , சனசமூக நிலைய பிரதிநிதிகள், ஊர்ப்பிரமுகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வறுமைக்கோட்டின் கீழ் காணப்படும் எல்லைக் கிராமமான கரடியன் குளத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வீட்டுத் தோட்ட பயிர்கள் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

No comments: