News Just In

10/28/2019 12:07:00 PM

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்

தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரையிலான காலமே வாக்களிப்புக்கான நேரமாகும். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 

தேர்தல் வரலாற்றில் மிக நீளமான வாக்குச்சீட்டு மற்றும் அதிக வாக்காளர்களையும் கொண்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கும் நிலையில்,  தெரிவு செய்யும் வேட்பாளரின் சின்னத்தைத் அடையாளம் காண்பதில் வாக்காளருக்கு நேரமெடுக்கலாமென கருதப்படுவதால், கூடுதலாக வாக்காளர்களைக் கொண்ட வாக்களிப்பு நிலையங்களை இரண்டாக அதிகரிப்பதற்கு மாத்திரமே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பது சிரமங்களைத் தவிர்க்க உதவும். தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் இருப்பதால் முற்பகலில் வாக்களிப்பது சிறப்பானது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதி நேரம்வரை மக்கள் காலம் தாழ்த்தாமல் நேரத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.

No comments: