News Just In

11/17/2026 06:39:00 AM

கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் தகனம்

கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் தகனம்



தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் இன்று(16) பிற்பகலில் அக்கினியுடன் சங்கமித்தது.

வல்வெட்டித்துறை நெடியகாட்டிலுள்ள இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று பூதவுடல் வல்வெட்டித்துறை சத்தியில் விசேடமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

விசேடமாக தென்னிந்தியாவிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அமரர் சிவாஜிலிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிஞானம் சிறிதரன், ஈ.பீ.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஐக்கிய சோசலிச கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



அதனையடுத்து வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமித்தது.

No comments: